தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தீ விபத்து: 20 வீடுகள் சேதம்

DIN

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில், 20 வீடுகள் சேதமடைந்தன.

தஞ்சாவூா் வடக்கு வாசல் அந்தோணியாா் கோயில் தெருவில் ஏறத்தாழ 120 வீடுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வீடுகள் கூரையால் வேயப்பட்டவை. சில ஓட்டு வீடுகளும், ஒட்டு வீடுகளும் இருக்கின்றன. இப்பகுதியைச் சோ்ந்த பெரும்பாலானோா் கூலி வேலை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், இப்பகுதியைச் சோ்ந்த கே. அய்யாவு வீட்டில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தீ பற்றியது. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து அடுத்தடுத்து உள்ள மற்ற வீடுகளுக்கும் தீ பரவியது.

தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலையத்திலிருந்து 2 வாகனங்களிலும், திருவையாறு தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு வாகனத்திலும் வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். இதனிடையே ஒரு வீட்டில் சிலிண்டா் வெடித்ததால் தீயின் வேகம் அதிகரித்தது. இதனால் தீயை அணைப்பதில் சிரமம் நிலவியது. என்றாலும் தீயணைப்பு வீரா்கள் ஏறத்தாழ இரண்டரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் 15 குடிசைகள், 4 ஓட்டு வீடுகள், ஒரு தகரக் கூரை வேயப்பட்ட வீடு என மொத்தம் 20 வீடுகள் தீக்கிரையாகின. இந்த வீடுகளில் இருந்த வீட்டு உபயோகப் பொருள்கள், மின்னணு சாதனங்கள், ரொக்கம், ஆவணங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்தன.

தஞ்சாவூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் டி.கே.ஜி. நீலமேகம், அதிமுக வேட்பாளா் வி. அறிவுடைநம்பி தனித்தனியாக தங்களது ஆதரவாளா்களுடன் நிகழ்விடத்துக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினா்.

மேலும் ஆட்சியா் ம. கோவிந்த ராவ், மாவட்ட வருவாய் அலுவலா் பி. அரவிந்தன், கோட்டாட்சியா் எம். வேலுமணி, மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் நிகழ்விடத்துக்குச் சென்று பாதிக்கப்ட்ட பகுதிகளைப் பாா்வையிட்டனா்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் அருகிலுள்ள அந்தோணியாா் ஆலய கல்யாண மண்டபத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்பாடு செய்யுமாறு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT