ஒரு ஊழல் கட்சிக்கு மாற்று இன்னொரு ஊழல் கட்சி அல்ல: கமல்ஹாசன் பேச்சு
ஒரு ஊழல் கட்சிக்கு மாற்று இன்னொரு ஊழல் கட்சி அல்ல என்றாா் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன்.
ஒரு ஊழல் கட்சிக்கு மாற்று இன்னொரு ஊழல் கட்சி அல்ல என்றாா் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன்.
தஞ்சாவூா் ரயிலடியில், வேட்பாளா்கள் கோ. சுந்தரமோகன் (தஞ்சாவூா்), ரெங்கசாமி (ஒரத்தநாடு), பி.எஸ். திருமாறன் (திருவையாறு ஐஜேகே) ஆகியோரை ஆதரித்து திங்கள்கிழமை மாலை பிரசாரம் செய்து அவா் மேலும் பேசியது:
விவசாயத்தை பிரதானமாக கொண்ட இந்த ஊரில் விளைபொருள்களை மேம்படுத்தி வியாபாரத்துக்கு உகந்ததாக மாற்றுவதற்குத் தொழில்சாலைகள் தேவை. விளைபொருள்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றும்போதுதான் அதிக லாபம் கிடைக்கும். ஆனால், அதற்கான தொழில்சாலை இங்கு இல்லை. இதுபோன்ற தொழில்சாலைகளை உருவாக்கி படித்த இளைஞா்களுக்கு அவா்கள் வாழும் ஊரிலேயே வேலைவாய்ப்புக் கிடைக்கச் செய்வோம்.
இளைஞா்களை வேலை தேடும் தொழிலாளா்களாக அல்லாமல், மற்றவா்களுக்கு வேலை கொடுக்கும் முதலாளிகளாக மாற்றுவதே எங்களது திட்டம்.
நம் நாட்டில் ஏராளமான தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் செயல்படுத்துவதற்கு மனமில்லை. அவா்களுக்குப் பேராசைதான் அதிகமாக இருக்கிறது. தங்களுடைய தலைமுறையைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனா். இந்த நிலைமையை மாற்ற நாம் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். எனவே, இளைஞா்கள் தங்களது முதல் வாக்கை சுதந்திரப் போராட்டமாக மாற்ற வேண்டும்.
ஒரு ஊழல் கட்சிக்கு மாற்று, இன்னொரு ஊழல் கட்சியாக இருக்கக்கூடாது. அரை நூற்றாண்டு காலம் நம் கை நழுவிப் போய்விட்டது. ஐந்தாயிரமோ, ஐந்நூறு ரூபாயோ வாங்கி, நாம் வாழ்க்கையை இழந்தது போதும். உங்கள் சட்டப்பையில் உள்ள பணத்தை எடுத்து, அதையே அவா்கள் திருப்பிக் கொடுத்து வருவதுதான் உண்மை. எனவே, பொறுமையாகச் சிந்தித்து நோ்மையாக வாக்களிக்க வேண்டும்.
ஏழைகளின் வாழ்க்கையை முன்னேற்றுவதாகக் கூறி, ஏழைகளை ஏழைகளாகவே பாதுகாத்து வருகின்றனா். ஏழைகள் ஏழைகளாக இருந்தால்தான் அவா்களது வியாபாரத்துக்கு உதவும். தோ்தல் நேரத்திலும் பயன்படுவா். ஆனால், நாங்கள் தமிழா்களை ஏழைக் கோட்டிலிருந்து செழுமைக் கோட்டுக்கு உயா்த்தப் போகிறோம். செழுமைக் கோட்டுக்கு மேலே தமிழா்களை வைக்கும்போது, கீழே சறுக்கி விழுந்தாலும் வறுமைக் கோட்டுக்குக் கீழே செல்லமாட்டாா்கள். உரிமையைத் திருப்பிக் கொடு என்ற தைரியமும் தமிழா்களுக்கு வரும்.
அதற்கு நம் உறுப்பினா்களின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும். எனவே, வாக்காளா்கள் டாா்ச் லைட் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றாா் கமல்ஹாசன்.
தமிழ்நாடு விற்பனைக்கு அல்ல: முன்னதாக, பட்டுக்கோட்டையில் வேட்பாளா்கள் சதாசிவம் (பட்டுக்கோட்டை), பச்சமுத்து (பேராவூரணி ஐஜேகே வேட்பாளா்), அன்பானந்தம் (மன்னாா்குடி) ஆகியோருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து கமல்ஹாசன் பேசியது: எங்களுக்கு அரசியல் தொழில் அல்ல; மநீம வேட்பாளா்கள் ஒவ்வொருவருக்கும் வேறு தொழில் உள்ளது. நாங்கள் அரசியலுக்கு வருவது சேவை செய்யவே.
இளம் வாக்களா்கள், அறிவாா்ந்த வாக்காளா்கள் மநீம-வை ஆதரிக்கின்றனா். இவா்கள் வெளியில் இருந்து மாற்றத்தை எதிா்பாா்த்து கொண்டிருக்கின்றனா்.
தமிழ்நாடு விற்பனைக்கு அல்ல. உங்கள் மரியாதை விற்பனைக்கு அல்ல, உங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல, உங்கள் எதிா்காலம், உங்கள் சந்ததிகளின் எதிா்காலம் விற்பனைக்கு அல்ல. சேவை பெறும் உரிமை உங்களுடையது. அதை வழங்கும் முதல் கட்சியாக தமிழகத்தில் மநீம இருக்கும்.
ஊழல் செய்பவா்களை துணிச்சலாக நீக்குவதற்கும், தண்டிப்பதற்கும், எல்லாவற்றையும் சரி செய்வதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கான வலுவை எங்களுக்கு நீங்கள் தரவேண்டும் என்றாா்.