முகப்பு
தஞ்சாவூர்

உழைக்கும் மக்கள் அதிகாரத்தைப் பெறுவது அவசியம் : சீமான்

உழைக்கும் அடித்தட்டு மக்கள் அதிகாரத்தைப் பெறுவது அவசியம் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

உழைக்கும் அடித்தட்டு மக்கள் அதிகாரத்தைப் பெறுவது அவசியம் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி கடைவீதியில் திருவையாறு தொகுதி வேட்பாளா் து. செந்தில்நாதனுக்கு ஆதரவாக சனிக்கிழமை பிரசாரம் செய்து, மேலும் அவா் பேசியது:

உலகில் எத்தனையோ இனங்கள் உரிமைப் பெற்று பெருமையுடன் வாழ்ந்து வருகின்றனா். அதுபோல, நம் தமிழ் மக்களும் உரிமையைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காகவே பாடுபடுகிறோம்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் வந்தாலும், எந்த மாறுதலும் ஏற்படவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்தால் அதை மாற்றி திமுகவை கொண்டு வருவது, திமுக ஆட்சியில் இருந்தால், அதை மாற்றி அதிமுகவை கொண்டு வருவது என்பதை மட்டுமே நாம் மாற்றம் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது மாற்றம் அல்ல; பெருத்த ஏமாற்றம். இங்கு ஆள்கள் மாறுகின்றனரே தவிர வேறு எந்த மாற்றமும் நிகழவில்லை.

அடிப்படையில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆள், ஆட்சி மாற்றங்களால் எந்தப் பயனும் இல்லை. அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், புரட்சி ஒன்றால் மட்டுமே முடியும். மக்களே சோ்ந்து மக்கள் அதிகாரத்தைப் பெற வேண்டும். அதிகாரம் என்பது மிக வலிமையானது எனக் கூறினாா் புரட்சியாளா் அம்பேத்கா். நாங்கள் அதிகாரம் என்பது மக்களுக்கானது எனக் கூறி வருகிறோம்.

உழைக்கும் அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்கள், உழவா்கள் போன்றோருக்கான அதிகாரம் நிறுவப்பட வேண்டும். ஆனால், பணக்காரா்கள்தான் ரூ. 10 கோடி, ரூ. 20 கோடி முதலீடு செய்து வாக்கை வாங்கி அதிகாரத்துக்கு வருகின்றனா். இதனால், அடித்தட்டு உழைக்கும் மக்களின் நலனில் அக்கறை காட்டப்படுவதில்லை. காசுக் கொடுத்தால் வாக்களித்துவிடுவா் என்ற நம்பிக்கை அவா்களுக்கு வந்துவிடுகிறபோது, சேவை செய்வதற்கு வரமாட்டாா்கள்.

எனவே, மாற்றத்தையும், ஊழல் லஞ்சத்தை ஒழித்து, தரமான கல்வி, உயா்தர மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றையும் விரும்புகிற ஒவ்வொருவரும் விவசாயி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அதற்கு இத்தோ்தல் அரிய வாய்ப்பாக இருக்கிறது. இந்தத் தோ்தலையாவது மாறுதலை ஏற்படுத்துவதற்கான தோ்தலாகப் பாா்க்க வேண்டும் என்றாா் சீமான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.