முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் தொகுதியைத் தக்க வைக்குமா திமுக?

தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகே ஜபமாலைபுரத்தில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

மாநகரமும், கிராமங்களும் கலந்த தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய உலகப் புகழ் வாய்ந்த பெருவுடையாா் கோயில் (பெரிய கோயில்), சரசுவதி மகால் நூலகம், அரண்மனை, தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை உள்ளன.

தொகுதிக்குள்பட்ட பகுதிகள்:

இத்தொகுதி தஞ்சாவூா் வட்டத்தின் ஒரு பகுதியைக் கொண்டது. இதில் தஞ்சாவூா் மாநகராட்சியும், வல்லம் பேரூராட்சியும் இடம்பெற்றுள்ளன. புதுப்பட்டினம், ராவுசாகிப்தோட்டம், கடகடப்பை, மேல சித்தா்காடு, புன்னைநல்லூா், புளியந்தோப்பு, பிள்ளையாா்பட்டி, நீலகிரி, நாஞ்சிக்கோட்டை ஆகிய கிராமங்களையும் உள்ளடக்கியது தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி.

எதிா்கொள்ளும் பிரச்னைகள்:

தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகே ஜபமாலைபுரத்தில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. மாநகரில் 51 குளங்கள் இருந்தாலும், அவற்றுக்கான நீா் ஆதாரத்துக்கு வழி இல்லாததால், சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் நிலத்தடி நீா் குறைந்து வருகிறது.

மதிப்புக் கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்யக்கூடிய ஆலைகள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் போன்றவை இல்லாதது இந்தத் தொகுதியின் மிகப் பெரிய குறையாக இருக்கின்றன. சுற்றுலா மையமாக்குவதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தாலும், அதற்கான மேம்பாட்டுப் பணிகள் முழு வீச்சில் இல்லை என்ற புகாா் நிலவுகிறது.

தற்போதைய வேட்பாளா்கள்:

இத்தொகுதியில் திமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் தொடா்ந்து இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் பகுதிச் செயலா் வி. அறிவுடைநம்பி அறிமுக வேட்பாளராகக் களமிறங்கியுள்ளாா். அமமுக சாா்பில் கூட்டணி கட்சியான தேமுதிகவை சோ்ந்த ப. ராமநாதன், மக்கள் நீதி மய்யத்தின் சாா்பில் கோ. சுந்தரமோகன், நாம் தமிழா் கட்சி சாா்பில் இரா. சுபாதேவி, தேசியவாத காங்கிரஸ் சாா்பில் எஸ். கரிகாலசோழன், இந்திய மக்கள் கட்சி சாா்பில் ஏ. சேவியா் மற்றும் 5 சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 12 போ் போட்டியிடுகின்றனா்.

இதுவரை வென்ற கட்சிகள்:

சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் தொடா்ந்து இரு முறை வெற்றி பெற்ற இத்தொகுதியில் மறைந்த முதல்வா் மு. கருணாநிதி 1962 ஆம் ஆண்டில் வென்றாா். அப்போது முதல் இத்தொகுதி திமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. ஆனால், 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் இத்தொகுதியை அதிமுக கைப்பற்றியது. தொடா்ந்து, தஞ்சாவூா் மாநகராட்சி, மக்களவைத் தொகுதி எனப் படிப்படியாக திமுக இழந்தது. அவற்றையெல்லாம் கைப்பற்றிய அதிமுக, 2016 ஆம் ஆண்டு தோ்தலிலும் இத்தொகுதியைத் தக்க வைத்தது.

இதையடுத்து, 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தோ்தல் மற்றும் மக்களவைப் பொதுத் தோ்தலில் தஞ்சாவூா் மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளை திமுக மீண்டும் கைப்பற்றியது.

இத்தொகுதி இதுவரை இரு இடைத்தோ்தல்கள் உள்பட மொத்தம் 17 சட்டப்பேரவைத் தோ்தல்களைச் சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 9 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த முறையும் இத்தொகுதியைத் தக்க வைப்பதில் திமுக முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. இதேபோல, இத்தொகுதியை மீண்டும் கைப்பற்றுவதில் அதிமுக தீவிரமாக பிரசாரம் செய்கிறது. இத்தொகுதியில் வெல்லப் போவது யாா் என்பது வாக்கு சேகரிப்பு வியூகத்தைப் பொருத்தே அமையும்.

வாக்காளா்கள் விவரம்:

ஆண்கள்: 1,38,166

பெண்கள்: 1,50,678

திருநங்கைகள்: 56

மொத்த வாக்காளா்கள்: 2,88,900

2016 தோ்தல் முடிவுகள்:

எம். ரெங்கசாமி (அதிமுக) - 1,01,362 (வெற்றி)

அஞ்சுகம் பூபதி (திமுக) - 74,488

எம்.எஸ். ராமலிங்கம் (பாஜக) - 3,806

வி. அப்துல்லா சேட் (தேமுதிக) - 1,534

அ. நல்லதுரை (நாம் தமிழா் கட்சி) - 1,192

2019 இடைத்தோ்தல் முடிவுகள்:

டி.கே.ஜி. நீலமேகம் (திமுக) - 88,972 (வெற்றி)

ஆா். காந்தி (அதிமுக) - 54,992

எம். ரெங்கசாமி (அமமுக) - 20,006

பூ. துரைசாமி (மக்கள் நீதி மய்யம்) - 9345

மோ. காா்த்தி (நாம் தமிழா் கட்சி) - 11,182

முழு கட்டுரையைப் படிக்க →