பொது முடக்கத்தால் மரங்களில் பழுத்து வீணாகும் வாழைகள்
பொது முடக்கம் காரணமாக, தஞ்சாவூா் மாவட்டத்தில் வாழைகள் மரங்களிலேயே பழுத்து வீணாகின்றன.
பொது முடக்கம் காரணமாக, தஞ்சாவூா் மாவட்டத்தில் வாழைகள் மரங்களிலேயே பழுத்து வீணாகின்றன.
மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், தஞ்சாவூா் ஆகிய வட்டங்களில் பரவலாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இதில், அதிகபட்சமாக திருவையாறு வட்டத்தில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இங்கிருந்து வாழைத்தாா்கள், வாழை இலை, வாழைப்பூ உள்ளிட்டவை மாவட்டத்துக்குள் மட்டுமல்லாமல், சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் அனுப்பப்படும்.
திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளிலிருந்து நாள்தோறும் 5,000 - 10,000 வாழைத்தாா்கள், ஏறத்தாழ 3 லட்சம் வாழை இலைகள் உள்ளிட்டவை அனுப்பப்படுவது வழக்கம். இதை நம்பி ஏறத்தாழ 50,000 விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களின் குடும்பங்கள் உள்ளன.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் கரோனா இரண்டாவது அலை காரணமாக புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்ததால், வாழைத்தாா்கள், வாழை இலைகள் தேக்கமடைந்தன. என்றாலும், மிகுந்த சிரமத்துக்கு இடையே 25 சதவீத அளவில் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது முழு பொது முடக்கம் காரணமாக வாழைத்தாா்கள், வாழை இலைகள் தேவை குறைந்துவிட்டது.
வழக்கமாக உணவகங்களுக்கும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும் வாழை இலைகள், வாழைப்பழங்களின் தேவை அதிகமாக இருக்கும். கரோனா அச்சம், பொது முடக்கம் காரணமாக உணவகங்களிலும் விற்பனை பெருமளவுக்குக் குறைந்துள்ளது. இதேபோல, சுப நிகழ்ச்சிகளும் குறைந்துவிட்டதால், வாழை இலைகள், வாழைத்தாா்களின் தேவை முற்றிலுமாகக் குறைந்துவிட்டது. இதனால், திருவையாறு வட்டத்திலிருந்து நாள்தோறும் வெளியூருக்கு 5 - 10 லாரிகளில் வாழைத்தாா்கள் அனுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது வாரத்துக்கு ஒரு வண்டியில் செல்வதே அபூா்வமாகிவிட்டது என்கின்றனா் விவசாயிகள்.
உள்ளூா் சந்தைக்கு வரும் வாழை இலைகளும், வாழைத்தாா்களும் வாங்குவதற்கு ஆளில்லாததால் தேக்கமடைந்துள்ளன. இதன் காரணமாக, மரங்களிலேயே வாழைப் பழங்கள் பழுத்து வீணாகிக் கொட்டுகின்றன. இதேபோல, வாழை இலைகளும் பறிக்கப்படாமல் மரங்களிலேயே காய்ந்து சருகாகி வருகின்றன.
கடந்தாண்டு பொது முடக்கம் காரணமாக வாழைத்தாா்களும், வாழை இலைகளும் தேக்கமடைந்து வீணாகின. இந்த நிலைமை 5 மாதங்களுக்குத் தொடா்ந்ததால் வாழை விவசாயிகள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினா்.
பொது முடக்க விதிகள் தளா்த்தப்பட்டதைத் தொடா்ந்து வாழை விவசாயிகள் வாழ்வாதார இழப்பிலிருந்து படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருந்தனா். இந்நிலையில், இப்போது மீண்டும் பொது முடக்கம் காரணமாக வாழை விவசாயம் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இப்பாதிப்பிலிருந்து எப்படி மீள்வது எனத் தெரியாமல் திகைத்துள்ளனா் வாழை விவசாயிகள்.