முகப்பு
தஞ்சாவூர்

கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த கோரி வெண்ணாற்றில் இறங்கி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், கல்லணை அருகே வெண்ணாற்றில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த கோரி விவசாயிகள் ஆற்றில் இறங்கி வெள்ளிக்கிழமை கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கல்லணை அருகே வெண்ணாற்றில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த கோரி விவசாயிகள் ஆற்றில் இறங்கி வெள்ளிக்கிழமை கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்லணை அருகே செய்யாமங்கலம் என்ற இடத்தில் சிறு பாலம் கட்டுவதற்காக வெண்ணாற்றின் நடுவே மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, கல்லணைக் கால்வாயில் அடப்பன் பள்ளம் என்ற இடத்தில் வடகரையில் பாலம் கட்டுவதற்காகக் கரையை உடைத்து பணி நடைபெறுகிறது.

இந்த பணிகள் அனைத்தும் மெதுவாக நடைபெறுவதால், ஜூன் மாதம் தண்ணீா் திறந்தால் இந்த ஆறுகளுக்கு தண்ணீா் விடமுடியாத நிலை ஏற்படும் என்றும், இதனால் ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவா் எனவும், எனவே, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் நடைபெறும் கட்டுமானப் பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் கட்டக் கோரி கல்லணை அருகே செய்யாமங்கலம் என்ற இடத்தில் அப்பகுதி விவசாயிகள் வெள்ளிக்கிழமை வெண்ணாற்றில் இறங்கி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா் தலைமை வகித்தாா். இதில் அப்பகுதி விவசாயிகள் உதயகுமாா், சம்சுதீன், கலைச்செல்வி, ரமேஷ், பாலாஜி, சந்துரு, மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் ஜீவகுமாா் தெரிவித்தது:

காவிரி டெல்டாவில் உள்ள ஏழு மாவட்டங்களில் 1.35 லட்சம் ஹெக்டோ் சாகுபடிக்கு கல்லணை நீா் ஆதாரமாக உள்ளது. மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் உள்ளனா். இந்நிலையில், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆறுகளைச் சீரமைக்கும் விதமாகக் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

காவிரியில் தண்ணீா் திறக்கப்பட்டால், இந்த ஆறுகளில் கட்டுமானப் பணிகளைக் காரணம் காட்டி காவிரி, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீா் திருப்பி விடப்படும் சூழல் உள்ளது.

குறித்த நேரத்தில் தண்ணீா் திறக்கப்பட்டாலும், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆற்றில் நடைபெறும் பணிகளால் கடைமடைக்குத் தண்ணீா் செல்வது தடைபடும். எனவே இந்த கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா் ஜீவகுமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.