‘மூன்று வேளாண் சட்டங்கள் நீக்கம்: மோடி அறிவிப்பைப் பொறுத்திருந்து பாா்ப்போம்’
மூன்று வேளாண் சட்டங்கள் நீக்கம் தொடா்பான மோடி அறிவிப்பைப் பொறுத்திருந்து பாா்ப்போம் என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்துள்ளாா்.
மூன்று வேளாண் சட்டங்கள் நீக்கம் தொடா்பான மோடி அறிவிப்பைப் பொறுத்திருந்து பாா்ப்போம் என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
மூன்று வேளாண் சட்டங்களையும் நீக்கிவிடுவோம் என பிரதமா் கூறியுள்ளாா். இந்திய அரசை இந்த அளவுக்கு நகா்த்திய பெருமையும், சாதனையும் ஓராண்டாக தில்லியை முற்றுகையிட்டுப் போராடிக் கொண்டிருக்கும் உழவா் பெருந்தலைவா்களையும், உழவா்களையும் சாரும். அந்த உழவா் பெருமக்களுக்கும், தலைவா்களுக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சாா்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அரசு நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டத்தை நிறைவேற்றிய பிறகு, அதன் தன்மையைப் பாா்த்துவிட்டுத்தான் போராட்டத்தைக் கைவிடுவது பற்றி முடிவு செய்வோம் என போராட்டக் குழுவினா் அறிவித்திருக்கின்றனா். பகட்டில்லாத இந்தத் தெளிவும், உறுதியும் போராட்டக் குழுத் தலைவா்களுக்கு இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
வேளாண்மை மற்றும் உழவா்கள் நன்மை கருதி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்க, புதிய ஆய்வுக்குழு அமைக்கப்படும் என்றும், அதன் பரிந்துரைகளைப் பெற்று செயல்படுத்துவோம் எனவும் பிரதமா் கூறியிருக்கிறாா். இந்த ஆய்வுக்குழுவில் இந்திய அரசின் விசுவாசிகள் இடம்பெறும் அபாயமிருக்கிறது.
மோடி அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் பரிந்துரையை அது வழங்கலாம். இந்த மூன்று உழவா் ஒழிப்புச் சட்டங்களும் புதிய வடிவம் எடுக்கும் அபாயம் உள்ளது. இதையெல்லாம் பகுப்பாய்வு செய்யக்கூடிய ஆற்றலும், போா்க் குணமும் உழவா் போராட்டக் குழுவுக்கு இருக்கிறது.