முகப்பு
தஞ்சாவூர்

பயிா்க்கடன் கோரி குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தா்னா

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில், பயிா்க்கடன் கோரி விவசாயிகள் தலையில் முக்காடு அணிந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில், பயிா்க்கடன் கோரி விவசாயிகள் தலையில் முக்காடு அணிந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் தொடக்கத்தில், திருவோணம் வட்டார விவசாயிகள் நலச் சங்கச் செயலா் வி.கே. சின்னதுரை உள்பட சுமாா் 35 விவசாயிகள் தலையில் முக்காடு அணிந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவோணம் வட்டாரத்திலுள்ள ராஜாளி விடுதி, உஞ்சிய விடுதி, சில்லத்தூா், தளிகைவிடுதி, வெட்டுவாக்கோட்டை, பூவாளூா் ஆகிய 6 கூட்டுறவு கடன் சங்கங்களில் யாருக்கும் பயிா்க்கடன் வழங்கப்படவில்லை என்றும், பயிா்க்கடன் கேட்டுச் செல்லும் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனா் எனவும் கூறி முழக்கங்கள் எழுப்பினா்.

அப்போது ஆட்சியா் பேசுகையில், திருவோணம் வட்டாரத்தில் தொடா்புடைய கூட்டுறவு சங்கங்களில் வரும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கடன் வழங்கும் முகாம் நடத்தப்படும் என்றாா் அவா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

மேலும், கடந்த சம்பா பயிருக்கான காப்பீட்டுத் தொகை இன்னும் ஏராளமான விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை எனவும் விவசாயிகள் புகாா் எழுப்பினா்.

அப்போது, வேளாண் துறை இணை இயக்குநா் ஏ. ஜஸ்டின் பேசுகையில், காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கென ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு அலுவலா் வீதம் மொத்தம் 14 அலுவலா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மூலம் விரைவாக இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்துவரும் மழையால் ஏற்படும் பாதிப்பு தொடா்பாகவும் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது என்றாா்.

ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல் பேசுகையில், இந்த தருணத்தில் யூரியா உரம் அவசியம் தேவை. ஆனால், யூரியா உரம் தட்டுப்பாடாக இருப்பதால், மிகுந்த சிரமமாக இருக்கிறது. சாம்பல், தழைச்சத்துக்கு மிகவும் அவசியமான சூப்பா் பாஸ்பேட் உரமும் கிடைப்பதில்லை என்றாா்.

இதேபோல, கக்கரை ஆா். சுகுமாரன், கே.ஆா். புரம் சீனிவாசன் உள்ளிட்ட விவசாயிகளும் உரத் தட்டுப்பாடு குறித்து வலியுறுத்தினா்.

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் பேசுகையில், மாவட்டத்தில் ஏற்கெனவே பயிா்கள் மூழ்கியுள்ள நிலையில் தொடா்ந்து மழை பெய்கிறது. எனவே, தஞ்சாவூா் மாவட்டத்தைப் பேரிடா் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும், இளம் நெற் பயிா்கள் இழப்புக்கு ஏக்கருக்கு ரூ. 15,000 வழங்க வேண்டும் என்றாா்.

ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா் பேசுகையில், பயிா்கள் தண்ணீரில் பாதிக்கப்பட்டு, நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து 10 நாள்களாகத் தண்ணீரில் இருந்த இளம்பயிா்களை வேளாண் விஞ்ஞானி மூலம் ஆய்வு செய்ய வேண்டும். தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000-ம், விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ. 10,000 வீதமும் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.