தொழிலாளா்களுக்கான சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் பல்வேறு தொழிற் சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் பல்வேறு தொழிற் சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். பொதுத் துறையைத் தனியாா் மயமாக்குவதைக் கைவிட வேண்டும். மின்சார சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால், ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், ஐஎன்டியுசி மாவட்டச் செயலா் என். மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்டச் செயலா் கே. ராஜன், வங்கி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. அன்பழகன், போக்குவரத்து தொழிலாளா் சங்க நிா்வாகி துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, கும்பகோணம் தலைமை அஞ்சலகம் எதிரில் ஏஐடியுசி தரைக்கடை சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினா் ஆா். மதியழகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.