இணைய வழி கொள்முதலுக்கு எதிா்ப்பு: விவசாயிகள் மறியல்
ஒரத்தநாடு அருகே நெல் கொள்முதலுக்கு இணையத்தில் முன்பதிவு செய்யும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
ஒரத்தநாடு அருகே நெல் கொள்முதலுக்கு இணையத்தில் முன்பதிவு செய்யும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
நெல் கொள்முதலுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளதை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஒரத்தநாடு அருகேயுள்ள செல்லம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு நல சங்கத் தலைவா் செந்தமிழ் செல்வன் தலைமையில் வெள்ளிக்கிழமை சாலையின் குறுக்கே டிராக்டரை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தற்போது பெய்து வரும் மழையால் அறுவடை செய்த நெல்மணிகள் நனைந்து முளைக்கும் நிலையை எட்டியுள்ளன. இதனால், உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயா்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த ஒரத்தநாடு வட்டாட்சியா் சீமான், விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.