தஞ்சாவூர்

இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்னை ஈழத் தமிழர்களுக்குப் புதிதல்ல : முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் 

DIN

இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்னை ஈழத்தமிழர்களுக்குப் புதிதல்ல; அதை 30 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம் என்றார் அந்நாட்டின் வட மாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகப் பொதுச் செயலருமான அனந்தி சசிதரன்.

தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்னை குறித்து பல தரப்பட்ட கருத்துகள் உருவாகி வருகின்றன. இது மிகப் பெரிய பிரச்னையாக இருந்தாலும், ஈழத்தமிழர்களான எங்களைப் பொருத்தவரை இதுபோன்ற பல பொருளாதாரத் தடைகளைத் தாண்டி வந்துள்ளோம். இன்னும் தாண்டுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

வடக்கு, கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்கள் 30 ஆண்டுகளாக மருந்து, உணவு, சுகாதாரப் பொருள்கள், எண்ணெய் உள்பட மிகப் பெரிய பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வாழ்ந்திருக்கிறோம். எனவே, இந்தப் பொருளாதாரத் தடையை நாங்கள் பெரிய விஷயமாக பார்க்கவில்லை. பொருளாதார உதவி என்பதை விட நாங்கள் எங்களுடைய உரிமைசார் உதவியைத்தான் கேட்கிறோம்.

இந்தத் பொருளாதார பிரச்னை என்பது தமிழர்களை அழிப்பதற்கான போருக்காக உலக நாடுகளிடம் கடன் பெற்றதால் ஏற்பட்டது. மேலும், மாறி, மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாலும் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தப் பொருளாதார பிரச்னையை பொருத்தவரை தென் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்குத்தான் புதிய விஷயம். எங்களுக்கு இது புது விஷயமல்ல. 

சிங்களர்களுக்கு புது விஷயம் என்பதால், அவர்கள் போராடுகின்றனர். ஆனால், இது இன்று, நேற்று ஏற்படுத்தப்பட்ட பொருளாதார பிரச்னை அல்ல. படிப்படியாக மாறி, மாறி ஆட்சிக்கு வந்தவர்களால் இந்த மோசமான பொருளாதார பிரச்னை ஏற்பட்டுள்ளது. என்றாலும், தென் இலங்கையில் வாழும் 60 லட்சம் மக்கள்தான் இந்த ஆட்சியாளர்களைத் தேர்வு செய்துள்ளனர். அவர்கள் இப்போது அனுபவிக்கின்றனர்.

தமிழர்களைப் பொருத்தவரை இதை 30 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம். எனவே, சர்வதேச விசாரணை நடத்தி, இன அழிப்பு நிகழாது என்ற உத்தரவாதத்தை எங்களுக்கு அளிக்க வேண்டும். எங்களது மக்கள் நிம்மதியாக வாழலாம் என்ற நிலையை உருவாக்க வேண்டும். எங்களுடைய போராட்டத்துக்கான நியாயத்தை எட்ட வேண்டும் என்றார் அனந்தி சசிதரன்.

அப்போது, புரட்சிக்கவி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கே. பத்மா உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT