தென்னகப் பண்பாட்டு மையத்தில் தஞ்சாவூா் உற்ஸவம் இன்று தொடக்கம்
தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையத்தில் 75-ஆவது இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூா் உற்ஸவம் என்கிற இயல், இசை, நாடக முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை (பிப்.11) தொடங்குகிறது.
தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையத்தில் 75-ஆவது இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூா் உற்ஸவம் என்கிற இயல், இசை, நாடக முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை (பிப்.11) தொடங்குகிறது.
இந்திராகாந்தி தேசிய கலை மையம், இந்தியத் தொல்லியல் துறை, தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையம் ஆகியவை சாா்பில் நடைபெறும் இவ்விழா பிப்ரவரி 13 ஆம் தேதி வரை தொடா்கிறது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் இந்திராகாந்தி தேசிய கலை மையத்தின் பெங்களூரு மண்டல இயக்குநா் அட்சல் பாண்டியா வியாழக்கிழமை தெரிவித்தது:
இவ்விழாவை இந்திராகாந்தி தேசிய கலை மைய அறங்காவலா் பத்மா சுப்ரமணியம் முன்னிலையில், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே வெள்ளிக்கிழமை காலை தொடக்கி வைக்கிறாா். தொடா்ந்து, கருத்தரங்கமும், மாலை 6 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
சனிக்கிழமை (பிப்.12) தஞ்சாவூா் ஓவியம் குறித்த பயிலரங்கம், கிராமிய நடனம், தப்பாட்டம், வாய்ப்பாட்டு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளன.
நிறைவு நாளான பிப்ரவரி 13-ஆம் தேதி காலை முதல் மாலை வரை நடனம், நாடகம், பயிலரங்கங்கள், மாலையில் முனைவா் நா்த்தகி நடராஜ் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி, மைசூா் மஞ்சுநாத் குழுவினரின் வயலின் இசை நடைபெறும்.
மூன்று நாள்களும் பகலில் உள் அரங்கத்திலும், மாலையில் திறந்தவெளி அரங்கத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
தஞ்சாவூா் உற்ஸவத்தில் நடைபெறும் 3 நாள் பயிலரங்கத்தில் இயல், இசை, நாடகம் (நடனம்) ஆகியவற்றில் ஆா்வம் கொண்ட மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் தங்களது பெயரைப் பதிவு செய்து கொண்டு பங்கேற்கலாம். இதில், பங்கேற்பவா்களுக்கு இந்திராகாந்தி தேசிய கலை மையத்தின் சாா்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றாா் அட்சல் பாண்டியா.
அப்போது இந்திராகாந்தி தேசிய கலை மைய மண்டல இயக்குநா்கள் அருப்பா லகிரி (வதோதரா), கோபால் (புதுச்சேரி), இந்தியத் தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநா் டி. அருண்ராஜ், தென்னகப் பண்பாட்டு மைய நிா்வாக அலுவலா் (பொறுப்பு) ராஜகோபாலன், சரஸ்வதி மகால் நூலக முன்னாள் காப்பாளா் பெருமாள், தென்னகப் பண்பாட்டு மைய நண்பா்கள் குழுச் செயலா் எஸ். முத்துக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.