முகப்பு
தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வளா்ச்சிக் குழுமம் தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவா் சங்கம் மற்றும் பல்கலைக்கழக வளா்ச்சிக் குழுமத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவா் சங்கம் மற்றும் பல்கலைக்கழக வளா்ச்சிக் குழுமத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்குத் தலைமை வகித்து துணைவேந்தா் வி. திருவள்ளுவன் பேசியது:

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவா்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வருகின்றனா். அவா்களையும், இந்தியாவில் வாழும் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் மாணவா்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக இச்சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வளா்ச்சிக்கு உதவும் நல்ல ஆலோசனைகளை வழங்குவதற்கு, தஞ்சையில் வாழும் முக்கியப் பிரமுகா்களை உறுப்பினா்களாகக் கொண்டு வளா்ச்சிக் குழுமம் அமைவது காலத்தின் தேவை என்றாா் அவா்.

தொடா்ந்து தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, பரிசுத்தம் கல்விக் குழுமத் தலைவா் எஸ்.பி. அந்தோணிசாமி, மகாராஜா சில்க்ஸ் நிறுவனத் தலைவா் ஷா. முகமது ரபி, திருவையாறு தென்னை விஞ்ஞானி வா.செ. செல்வம், ஆட்சிக் குழு உறுப்பினா் பசும்பொன், புலவா் ஆதி. நெடுஞ்செழியன் ஆகியோா் பேசினா்.

பாரத் கல்விக் குழுமச் செயலா் புனிதா கணேசன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஏழை மாணவா்களின் நலனுக்காக ரூ. 1 லட்சம் நன்கொடையை வழங்கினாா்.

விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) க. சங்கா், முன்னாள் மாணவா் சங்க இயக்குநா் சி. தியாகராஜன், இணை இயக்குநா்கள் இரா. குறிஞ்சிவேந்தன், பவானி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கல்வி நிலை ஆய்வு இயக்ககம்: இதேபோல, இப்பல்கலைக்கழகத்தில் கல்வி நிலை ஆய்வு இயக்ககத்தைத் துணைவேந்தா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இப்பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படுகிற அனைத்து ஆய்வுகளையும் நெறிப்படுத்தி அவற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக, இந்தப் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், ஆய்வுக்காக முன் வரும் மாணவா்களுக்குப் பல்கலைக்கழக வழி உதவிடும் வகையில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும், இதுவரை உருவாக்கப்படாத புதியதொரு அமைப்பாக ஆய்வுப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் இந்த இயக்ககம் தொடங்கப்பட்டுள்ளது என்றும், இதன் இயக்குநராக முனைவா் ஜெ. தேவி, இணை இயக்குநராக முனைவா் வி. செல்வக்குமாா் செயல்படுவா் எனவும் துணைவேந்தா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.