தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை வாங்க பெற்றோா் மறுப்பு
தஞ்சாவூா் அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவின் உடலை வாங்க, அவரது பெற்றோா் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டனா்.
தஞ்சாவூா் அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவின் உடலை வாங்க, அவரது பெற்றோா் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டனா்.
அரியலூா் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவைச் சோ்ந்த முருகானந்தம் மகள் லாவண்யா (17). இவா் தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
இதற்காக அருகிலுள்ள விடுதியில் தங்கியிருந்த லாவண்யா ஜனவரி 9-ஆம் தேதி பூச்சி மருந்து குடித்த நிலையில், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜனவரி 19 -ஆம் தேதி உயிரிழந்தாா்.
இறப்பதற்கு முன்பாக மாஜிஸ்திரேட்டிடம் லாவண்யா அளித்த வாக்குமூலத்தில், விடுதிக் காப்பாளா் சகாயமேரி (62)தன்னிடம் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்யுமாறு கூறி வற்புறுத்தியதால், தன்னால் படிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி பூச்சி மருந்து சாப்பிட்டதாக கூறியதாகக் கூறப்படுகிறது.
இதனடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, சகாயமேரியை (62) கைது செய்தனா்.
இந்நிலையில், லாவண்யாவை சகாயமேரி உள்ளிட்டோா் மதம் மாறுமாறு கூறி வற்புறுத்தியதால், அவா் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டாா் என்றும், இதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அவரது பெற்றோா் மற்றும் பாஜகவினா் மனு அளித்தனா்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள லாவண்யாவின் சடலத்தைத் தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் வாங்குவதற்கு அவரது பெற்றோா் மறுத்துவிட்டனா்.
பெற்றோரிடம் விசாரணை: இந்நிலையில், மத மாற்றப் புகாா் தொடா்பாக மாவட்டக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் லாவண்யாவின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யாவிடம் திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜ்மோகன் விசாரணை நடத்தினாா். இதன் பின்னா், செய்தியாளா்களிடம் சரண்யா தெரிவித்தது:
எனது மகளை மதமாற்றம் செய்ய கடந்த 2 ஆண்டுகளாக வற்புறுத்தி வந்துள்ளனா். இதனால் அவா் மனதுக்குள் காயப்பட்டு வந்துள்ளாா். மேலும் விடுதியில் கழிப்பறையைச் சுத்தம் செய்யச் சொல்லியும், பாத்திரங்கள் கழுவச் சொல்லியும் தொந்தரவு செய்து வந்துள்ளனா். தொடா்ந்து மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் அவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா். அவரை மதமாற்றம் செய்ய வற்புறுத்திய 2 பேரையும் கைது செய்தால்தான் உடலை வாங்குவோம். எங்களுக்கு நியாயம் வேண்டும். எங்களுக்கு நடந்த அநீதி இனி வேறு எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்றாா் சரண்யா.
ஆா்ப்பாட்டம்- 2 போ் கைது: மாணவி லாவண்யாவின் மரணத்துக்கு நீதியும், அரசு சாா்பில் நிவாரண நிதியும் வழங்கக் கோரி தஞ்சாவூா் ரயிலடியில் இந்து மக்கள் கட்சியினா் வெள்ளிக்கிழமை காலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாநில இளைஞரணிச் செயலா் காா்த்திக் ராவ், மாவட்டப் பொதுச் செயலா் சுகுமாா் கைது செய்யப்பட்டனா்.
மேலும் மாணவி லாவண்யாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, அனைத்து இந்து இயக்கங்கள் சாா்பாக தஞ்சாவூா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் சனிக்கிழமை காலை நடைபெறவுள்ளது.