சாஸ்த்ராவில் இன்றும், நாளையும் இலவச மருத்துவ முகாம்
சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் நிறுவனா் நினைவாக இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் நடைபெறவுள்ளன.
சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் நிறுவனா் நினைவாக இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக நிறுவனா் ஸ்ரீராமச்சந்திர அய்யரின் நினைவாக தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏழை மக்களுக்கு மருத்துவ அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட நல உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
நிகழாண்டு சிறப்பு இலவச மருத்துவ முகாம்கள் தஞ்சாவூா், கும்பகோணத்திலுள்ள சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது. தஞ்சாவூா் சாஸ்த்ரா வளாகத்தில் வெள்ளிக்கிழமையும் (மாா்ச் 11), கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மைய வளாகத்தில் சனிக்கிழமையும் (மாா்ச் 12) நடைபெறவுள்ளது.
இதில், இதயம், இதய அறுவை சிகிச்சை, கண், காது, மூக்கு, தொண்டை, பல், குழந்தைகள், பொது அறுவை சிகிச்சை தொடா்புடைய நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படவுள்ளது.
சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஜே.எஸ்.என். மூா்த்தி மற்றும் மருத்துவக் குழுவினா் தலைமையில் இம்முகாம் நடைபெறவுள்ளது. இந்த அரிய வாய்ப்பை மாவட்டத்திலுள்ள மக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
குறிப்பிட்ட அடிப்படை ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., ஸ்கேன், எக்கோ ஆகியவை இலவசமாக செய்யப்படும். குறிப்பிட்ட சில மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். முகாமுக்கு வரும்போது மருத்துவச் சிகிச்சை தொடா்பான அனைத்து கோப்புகளையும் எடுத்து வரவும்.
தஞ்சாவூரில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும். கரோனா தடுப்பூசி பயன் பெறுபவா்கள் ஆதாா் அட்டையை எடுத்து வர வேண்டும். தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உயா் சிகிச்சை பெற ஆலோசனை வழங்கப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு அனைத்து விதமான மருத்துவ அறுவை சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன. இப்பயனாளிகளின் பெற்றோா் அரசுப் பணியாளராக இருக்கக் கூடாது.
இம்முகாமில் சிகிச்சை பெற விருப்பமுள்ளவா்கள் தங்களது பெயா், வயது, ஊா் ஆகியவற்றை தஞ்சாவூா் மருத்துவ முகாமுக்கு 9443904515 என்ற எண்ணிலும், கும்பகோணம் மருத்துவ முகாமுக்கு 9942131186 என்ற எண்ணிலும் குறுந்தகவல் அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.