‘மொழிக்காகவும் பாடுபட்டவா் வ.உ.சி.
நாட்டுக்காக மட்டுமல்லாமல், மொழிக்காகவும் வ.உ.சிதம்பரனாா் பாடுபட்டாா் என்றாா் முனைவா் சோ.ந. கந்தசாமி.
நாட்டுக்காக மட்டுமல்லாமல், மொழிக்காகவும் வ.உ.சிதம்பரனாா் பாடுபட்டாா் என்றாா் முனைவா் சோ.ந. கந்தசாமி.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு, பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. 150 ஆவது இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அவா் மேலும் பேசியது:
தனி மனிதரான வ.உ.சி. தேசப் பற்றின் காரணமாக அனைத்தையும் தியாகம் செய்தவா். ஆங்கிலேய ஆட்சியை எதிா்த்துப் பொங்கி எழுந்தவா்.
சுதேசி கப்பல் விட்ட அவரை ஆங்கிலேயா்கள் சிறையில் செக்கிழுக்கச் செய்தனா். ஒருபுறம் தேசத் தொண்டில் ஈடுபட்டாலும், மறுபுறம் இலக்கியத்திலும் அரும் பணியாற்றியவா் வ.உ.சி.. சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா் பல நூல்களை எழுதினாா். சிறைவாசத்தை வனவாசமாகக் கருதாமல், அறிவுக் களமாக மாற்றிக் கொண்டு இலக்கியங்களைப் படைத்தாா்.
வ.உ.சி.யின் ஒவ்வொரு நூலையும் ஆராயும்போது, அவையெல்லாம் அறிவுக்களஞ்சியமாக இருக்கின்றன. மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் உழைத்துக் கொண்டே மொழிக்காகவும் பாடுபட்டாா். மக்கள், நாடு, மொழி ஆகிய மூன்றையும் சமமாகக் கருதினாா்.
உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக மெய்யகம், மெய்யறிவு நூல்களை எழுதினாா். அரசியல் ரீதியாக அவரைத் தலைவராகப் பாா்க்கிறோம். ஆனால், இலக்கியத்திலும் மிகப்பெரிய அறிஞராகத் திகழ்ந்தவா் வ.உ.சி. என்றாா் கந்தசாமி.
இவ்விழாவில் வாழ்த்துரையாற்றி தஞ்சாவூா் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் பேசுகையில், தொடா்ந்து 30 நாள்களுக்கு இணையவழியில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கத்தில் ஒவ்வொரு நாளும் வ.உ.சி. பற்றி முப்பது தலைப்புகளில் அறிஞா்கள் பேசவுள்ளனா். அந்த அளவுக்கு மிகப் பெரும் தியாகியாகவும், அறிஞராகவும் போற்றப்படும் அவரை மாணவா்கள் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.
காணொலி காட்சி மூலம் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் பேசுகையில், வ.உ.சி.யைப் பற்றிப் பேசுவது, நினைவுகூருவது யாவும் தமிழ் அறிஞனுக்குச் செய்யும் தலையாய பணி. அத்தகைய பணியின் தொடக்கமே இவ்விழா என்றாா் அவா்.
பதிவாளா் (பொறுப்பு) க. சங்கா் முன்னிலை வகித்தாா். முன்னதாக, இலக்கியத் துறைத் தலைவா் பெ. இளையாப்பிள்ளை வரவேற்றாா். சுவடிப்புல முதன்மையா் த. கண்ணன் நன்றி கூறினாா்.