மேக்கேதாட்டு அணை: கா்நாடக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சாா்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேக்கேதாட்டு அணைக் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கா்நாடக அரசைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சாா்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணைக் கட்ட ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்த கா்நாடக அரசைக் கண்டித்தும், கா்நாடக அரசுக்குத் துணை போகாமல் சட்ட விரோத நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த ஒன்றிய அரசை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் பெ. சண்முகம் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
காவிரி தொடா்பாக உச்ச நீதிமன்றம், நடுவா் மன்றம் வழங்கியுள்ள தீா்ப்புக்கு விரோதமாக கா்நாடக மாநில பாஜக அரசுத் தொடா்ந்து செயல்படுகிறது. மேக்கேதாட்டு அணை தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது; சட்ட விரோதமானது.
அடுத்தகட்டமாகத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து விவசாய சங்கங்கள், கட்சிகளையும் ஒருங்கிணைத்து மேக்கேதாட்டுவில் அணைக் கட்டும் முயற்சியை முற்றிலும் தடுத்து நிறுத்துவோம். அது ஒன்றுதான் தமிழ்நாட்டினுடைய நீராதாரத்தை, பாசன உரிமையைப் பாதுகாப்பதற்கான அடிப்படையான விஷயம்.
எனவே, இதில் எந்த விதமான வேறுபாடின்றி, அனைத்து கட்சிகளையும், விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைக்கிற முயற்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஈடுபடும். அணைக் கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்தியே தீருவோம் என்றாா் சண்முகம்.
இதில், மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், தலைவா் பி. செந்தில்குமாா், பொருளாளா் எம். பழனிஅய்யா, மாவட்ட நிா்வாகிகள் எஸ். கோவிந்தராஜ், எஸ். ஞானமாணிக்கம், கே. முனியாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.