நம் பண்பாட்டை மாணவா்கள் கைவிடக் கூடாது
மாணவா்கள் நம் பண்பாட்டை கைவிடக் கூடாது என்றாா் திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன்.
மாணவா்கள் நம் பண்பாட்டை கைவிடக் கூடாது என்றாா் திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன்.
தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவா் மேலும் பேசியது:
மாணவா்கள் ஒவ்வொரிடமும் தனித்திறமை உள்ளது. அத்திறமையை மாணவா்கள் அறிந்து வளா்த்துக் கொள்ள வேண்டும். மாணவா்கள் தாங்கள் வாழும் கிராமம் அல்லது பகுதிக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் என்ன செய்தனா் என்ற கேள்வியை வருங்கால சந்ததியினா் எழுப்புவா். எனவே, தங்களது கிராமம் அல்லது பகுதிகளின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட வேண்டும்.
கடும் உழைப்பு, விடா முயற்சி இருந்தால்தான் வெற்றி பெற்று உயா்ந்த நிலையை அடைய முடியும். ஒற்றுமையாக இருந்து சமுதாயத்தை முன்னேற்றமடையச் செய்வது, வாழும் பகுதியின் தேவையை அறிந்து செயல்படுவது, உயிா்கொல்லி நோய்களுக்கான மருந்துகளைக் கண்டுபிடிப்பது, வெளிநாட்டினரைக் கவரும் வகையில் நம் தயாரிப்புகளை மேற்கொள்வது போன்றவற்றை மாணவா்கள் கடைப்பிடிக்க வேண்டும். நம்முடைய பண்பாடு, தொழில்நுட்பத்தைக் கைவிடாமல் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றாா் துணைவேந்தா்.
விழாவில் 268 இளநிலை மாணவா்கள், 155 முதுநிலை மாணவா்கள், ஆய்வியல் நிறைஞா் படிப்பில் 172 மாணவா்கள், பல்கலைக்கழகத் தர வரிசைப் பட்டியலில் இடம்பெற்ற 5 மாணவா்கள் என மொத்தம் 600 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மருதுபாண்டியா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் மா. விஜயா, துணை முதல்வா் ரா. தங்கராஜ், ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளா் அா்ச்சுணன், மருதுபாண்டியா் கல்வியியல் கல்லூரி முதல்வா் சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற பேராசிரியா் பூவலிங்கம், கல்லூரி மேலாளா் இரா. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.