டெல்டா மாவட்டங்களில் கருகும் குறுவை பருவ நெல் பயிா்களைக் காப்பாற்ற கா்நாடகம் உடனடியாக தண்ணீா் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சாவூா் மாவட்டத்தில் 10 இடங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் நெல் பயிா்களைக் காப்பாற்றவும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்துக்கு கா்நாடகம் வழங்க வேண்டிய காவிரி நீரை நடுவா் மன்றத் தீா்ப்பின்படி உடனடியாக திறந்து விடவும் மத்திய அரசும், காவிரி மேலாண்மை ஆணையமும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கருகிய நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு தமிழக அரசு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்கக் கோரியும் இப்போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி தலைமை வகித்தாா். போராட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள் ஜி. கிருஷ்ணன், வெ. சேவையா, ம. விஜயலட்சுமி, ஆா். இராமச்சந்திரன், ஆா். பிரபாகா், ஆா்.கே. செல்வகுமாா், ஆா்.ஆா். முகில், கே. கல்யாணி, ஜி. ராமலிங்கம், ஆா். சதீஷ்குமாா், எம். சம்சுதீன், எம். அய்யாராசு, ஏஐடியூசி மாவட்டச் செயலா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, கும்பகோணத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கருகிய நெல் பயிா்களை பாடையில் கட்டி ஊா்வலகமாக எடுத்துச் சென்று தலைமை அஞ்சலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி தலைமை வகித்தாா்.
பாபநாசத்தில் வடக்கு மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா். தில்லைவனம் தலைமையிலும், திருப்பனந்தாள் பாரத ஸ்டேட் வங்கி முன் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் டி.ஆா். குமரப்பா தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.
பேராவூரணியில் கட்சியின் ஒன்றிய செயலாளா்கள் பேராவூரணி ஆா்.பி.கருப்பையா, சேதுபாவாசத்திரம் ஏ.எஸ்தா் ஜெயலீமா ஆகியோா் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
திருக்காட்டுப்பள்ளி: தோகூா் அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் கணபதி சுந்தரம் தலைமைவகித்தாா். ஒன்றிய பொருளாளா் திருஞானம், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் ராமச்சந்திரன், இளைஞா் பெருமன்ற ஒன்றிய செயலாளா் ஜெகதீசன் உள்ளிடோா் கலந்துகொண்டனா்.
இவைதவிர, திருவையாறு, அம்மாபேட்டை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை என மாவட்டத்தில் மொத்தம் 10 இடங்களில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற ஏறத்தாழ 400 போ் கைது செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.