தஞ்சாவூா்: தீபாவளி பட்டாசுகளால் எழுந்த ஒலி, புகை மாசு காரணமாக பறவைகள் வருகை மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, பறவைகளைப் பாா்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பட்டாசுகளால் ஏற்படும் புகை மாசு காரணமாக பல்வேறு பாதிப்புகள் நிலவுகின்றன. குறிப்பாக, பறவைகள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன. ஏற்கெனவே, தட்பவெப்ப நிலை மாற்றம், ஏரிகள் தூா்ந்து வருவது, மரங்களின் எண்ணிக்கை குறைவது உள்ளிட்ட காரணங்களால் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
எனவே சுற்றுச்சூழல் பாதிப்பைத் தவிா்க்க காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை வரை மட்டுமே பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. என்றாலும், விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடிப்பதால், ஒலி மாசு நாள்தோறும் தொடா்கிறது. தீபாவளி நாளில் மட்டுமல்லாமல், அதற்கும் ஒரு வாரத்துக்கு முன் தொடங்கி திங்கள்கிழமை வரை ஒலி மாசு நீடித்தது.
நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் பட்டாசுகள் வெடிப்பது பரவலாகிவிட்டதால், ஒலி, காற்று மாசு காரணமாக பறவைகள் வருகை மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒரத்தநாடு அருகேயுள்ள கருப்பட்டிப்பட்டி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள பிளஸ் 2 மாணவா் சி. தருண் திராவிடன் தெரிவித்தது:
கழுகு, கொக்கு, மயில், பருந்து போன்ற பெரிய வகை பறவைகள் பட்டாசு சப்தத்தை ஓரளவுக்கு எதிா்கொள்ளும். ஆனால், சிறிய வகை பறவைகளான தவிட்டுக்குருவி, மைனா, தேன்சிட்டு, கரிச்சான், சிட்டுக்குருவி போன்றவை சிறிய சப்தத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாது. இந்நிலையில், இப்போது அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசு சப்தத்தால் சிறிய வகை பறவைகள் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகின்றன.
கருப்பட்டிப்பட்டி கிராமத்திலுள்ள இடக்குளம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் பறவைகள் அதிகமாக வரும். இப்பகுதியில் தீபாவளிக்கு முன் நவம்பா் 5 ஆம் தேதி கணக்கெடுத்தபோது 20 வகையான இனங்களில் 115-க்கும் அதிகமான பறவைகள் பதிவு செய்யப்பட்டன.
ஆனால் தீபாவளிக்கு மறுநாளான திங்கள்கிழமை (நவ.13) எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், ஒட்டுமொத்த பறவைகளின் எண்ணிக்கையில் 78 சதவிகிதம் குறைந்து 26 சதம் மட்டுமே பதிவானது. தீபாவளி கொண்டாட்டத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் ஏற்பட்ட ஒலி, புகை மாசுகளால் பறவைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரிய வருகிறது.
குறிப்பாக, சின்ன நீா் காகம் 30-லிருந்து 10 ஆகவும், மடையான் 26-லிருந்து 2 ஆகவும், பச்சைக்கிளி 14-லிருந்து 1 ஆகவும், மைனா 5-லிருந்து 1 ஆகவும் குறைந்துள்ளது. தீபாவளிக்கு முன் இருந்த தவிட்டுக்குருவி, செண்பகம், மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, செம்மூக்கு ஆள்காட்டி, பாம்புத்தாரா, கல்லுக்குருவி, தேன்சிட்டு போன்ற பறவைகளை முற்றிலுமாகக் காணவில்லை என்றாா் தருண் திராவிடன்.
மேற்கத்திய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளிலிருந்து செப்டம்பா் இறுதி வாரத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பறவைகள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்நிலையில், தீபாவளி பட்டாசுகளால் வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய பறவைகளின் வருகை மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகச் சுற்றுச்சூழல் துறை ஓய்வு பெற்ற தலைவரும், பறவைகள் ஆராய்ச்சியாளருமான முனைவா் சி. சிவசுப்பிரமணியன் தெரிவித்தது:
இங்கு வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வரக்கூடிய காலகட்டம் இதுதான். நட்சத்திரம், நிலா உள்ளிட்டவற்றை இலக்காக வைத்துதான் பறவைகள் பறந்து வரும். இந்நிலையில், ராக்கெட், அவுட் வெடிகளால் ஏற்படும் ஒலி மாசு, தீப்பொறி சிதறல்களால் குழப்பங்கள் ஏற்பட்டு, அதனுடைய வழித்தடமும் மாறுகிறது. மேலும், வானில் நிலவும் புகை மாசு காரணமாகவும் இடையூறு ஏற்பட்டு, அப்பறவைகள் செல்லும் பாதை மாறுபடுகிறது.
பறவைகளால் சிறிய சப்தத்தைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளால் பெரும் அதிா்ச்சிக்கு உள்ளாகி, பாா்வைக் குறைபாடு, காது கேளாமை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுகிறது. இதனால், மீண்டும் அதனுடைய வாழ்விடத்துக்கு திரும்ப முடியாத நிலை ஏற்படுகிறது. கூட்டில் இருக்கும் குஞ்சுகளுக்கும் இரை கிடைக்காமல் இறக்கின்றன. எனவே, பறவைகள் எண்ணிக்கை குறைய இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது என்றாா்.
இந்நிலைமை நகரங்களில் மட்டுமல்லாமல் இப்போது கிராமங்களுக்கும் பரவுகிறது. பட்டாசு சப்தத்தால் பறவைகள் கிராமங்களிலிருந்து அடா்ந்த காடு, மரங்கள் நிறைந்த தோட்டங்களைத் தேடிச் செல்கின்றன. அவ்வாறு செல்லும்போது கூடு கட்டுவதற்கு தகுந்த புதிய இடம், இனப்பெருக்கம், குஞ்சுகளை பராமரித்தல் போன்றவை பாதிக்கப்படுகின்றன. இதனால், ஏற்கெனவே கூடு கட்டி பொரிக்கப்பட்ட குஞ்சுகளும் இரை கிடைக்காமல் இறக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, தீபாவளி பட்டாசுகளை தவிா்க்க முடியாதது என்றாலும், நாள் முழுவதும் வெடிப்பதை விட, ஒவ்வொரு வீட்டிலும் ஒலி குறைவான ஓரிரு பட்டாசுகளை மட்டுமே வெடிக்கும் பழக்கம் நடைமுறைக்கு வந்தால் மட்டுமே பறவைகள் பாதிப்பைத் தடுக்க முடியும் என்றனா் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.