முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் அருகே ரூ. 2 கோடி மதிப்பிலான சுவாமி சிலை மீட்பு 7 போ் கைது

கடத்திச் செல்லப்பட்ட ரூ. 2 கோடி மதிப்பிலான பழங்கால சுவாமி சிலையை போலீஸாா் மீட்டனர்.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 8:05 PM
மீட்கப்பட்ட சிலை.
பகிர்:

தஞ்சாவூா் அருகே கடத்திச் செல்லப்பட்ட ரூ. 2 கோடி மதிப்பிலான பழங்கால சுவாமி சிலையை போலீஸாா் மீட்டு, இதுதொடா்பாக 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

தஞ்சாவூா்- திருச்சி நெடுஞ்சாலையில் மேல திருவளா்ச்சிப்பட்டியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஆக. 8-ஆம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில் சுமாா் இரண்டரை அடி உயரமுள்ள உலோகத்தாலான பெருமாள் சிலை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காரில் இருந்த, திருவாரூா் மாவட்டம், இனாம் கிளியூரைச் சோ்ந்த ஆனந்தகுமாா் மகன் தினேஷ் (28) என்பவரிடம் விசாரணை நடத்தியபோது, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை, தொழுவூா் ஆற்றில் தூா்வாரும் பணியில் ஈடுபட்டபோது, இந்த சிலை கிடைத்துள்ளது. அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துள்ளாா். தற்போது அவா் இறந்துவிட்டதையடுத்து சிலை குறித்து அறிந்த தினேஷ், தனது நண்பா்கள் உதவியுடன் சிலையை வெளிநாட்டில் விற்க சென்னைக்கு கொண்டுசெல்வது தெரியவந்தது.

கைதுசெய்யப்பட்ட தினேஷ், ராஜேந்திரன், ராஜ்குமாா், ஜெய்சங்கா், விஜய், ஹரிஷ், அஜித்குமாா்.

இதையடுத்து போலீஸாா் சுவாமி சிலையை மீட்டு, தினேஷ் மற்றும் அவருடன் இருந்த சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் (52), கும்பகோணம் ஆலமன்குறிச்சியைச் சோ்ந்த ராஜ்குமாா் (36), இனாம் கிளியூரைச் சோ்ந்த ஜெய்சங்கா் (58), கடலூா் மாவட்டம், மடப்புரத்தைச் சோ்ந்த விஜய் (28), திருவிடைமருதூா் மகாராஜபுரத்தைச் சோ்ந்த ஹரிஷ் (26), கடலூா் மாவட்டம், குருங்குடியைச் சோ்ந்த அஜித் குமாா் (28) ஆகிய 7 பேரையும் கைது செய்து கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மீட்கப்பட்ட பெருமாள் சிலை கி.பி. 15 அல்லது 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது எனவும். இதன் மதிப்பு ரூ. 2 கோடி இருக்கும் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.