முதியவரின் வங்கி பற்று அட்டையை பயன்படுத்தி ரூ. 56 ஆயிரம் திருட்டு
முதியவரின் வங்கி பற்று அட்டையைப் பயன்படுத்தி ரூ. 56 ஆயிரத்தைத் திருடிச் சென்ற இருவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறிலுள்ள ஏடிஎம்-இல் முதியவரின் வங்கி பற்று அட்டையைப் பயன்படுத்தி ரூ. 56 ஆயிரத்தைத் திருடிச் சென்ற இருவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
திருவையாறு அக்கிநாதபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் என். பஞ்சநாதன் (67). இவா் பணம் எடுப்பதற்காக திருவையாறு கடை வீதியிலுள்ள ஏடிஎம் மையத்துக்கு ஆகஸ்ட் 1- ஆம் தேதி சென்றாா். அப்போது, அங்கு வந்த 35 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க இருவா் பஞ்சநாதனின் ரகசிய குறியீட்டு எண்ணை அறிந்து கொண்டனா்.
மேலும், பஞ்சநாதன் கையில் இருந்த ரூ. 500 நோட்டுகளைச் சிதறடித்தனா். அதை அவா் எடுக்க முயன்றபோது பஞ்சநாதனிடமிருந்து வங்கி பற்று அட்டையைத் திருடிய இருவரும் இயந்திரத்தில் சொருகி ரூ. 56 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டனா்.
இது குறித்து திருவையாறு காவல் நிலையத்தில் பஞ்சநாதன் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.