நமது நிருபா்
தஞ்சாவூா்: தஞ்சாவூரில் ஒரேயொரு கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மட்டுமே இருப்பதால், நாய்களைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.
நாடு முழுவதும் தெரு நாய்களால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனா். இதற்கான தீா்வு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிசிக்சை செய்யப்பட்டாலும், அத்திட்டம் முழுமையான தீா்வுக்குக் கைகொடுக்கவில்லை.
தஞ்சாவூா் மாதாகோட்டை சாலையிலுள்ள மிருக வதை தடுப்பு சங்க (எஸ்.பி.சி.ஏ.) வளாகத்தில் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் 2023, பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. இந்த மையத்தில் ஒரு கால்நடை பணி மருத்துவா், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியிலிருந்து நாள்தோறும் 2 அறுவை சிகிச்சை நிபுணா்கள் உள்ளிட்டோா் பணியாற்றி வருகின்றனா். மாநகராட்சிப் பணியாளா்கள் வாகனத்தில் பிடித்து வரும் தெரு நாய்களுக்கு இம்மையத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
என்றாலும், இந்த மையத்தில் தற்போதுள்ள கட்டமைப்பு, கால்நடை மருத்துவா்கள் எண்ணிக்கை மூலம் ஒரு நாளைக்கு 6 நாய்களுக்கு மட்டுமே கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது.
30 சதவீத நாய்கள் குறைந்துள்ளன: இந்த மையம் தொடங்கப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தஞ்சாவூா் மாநகரில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான தெரு நாய்கள் இருப்பது தெரிய வந்தது. ஏறத்தாழ ஒன்றரை ஆண்டாக இந்த மையம் மூலம் இதுவரை 2 ஆயிரத்து 300 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், 80 சதவீதம் பெண் நாய்கள் எனவும் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தினா் தெரிவித்தனா்.
இதன்மூலம் மாநகரில் ஏறத்தாழ 30 சதவீதம் நாய்கள் பெருக்கம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மாநகரில் நாய்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சில மாதங்களாக நாய்க் கடி, வாகனத்தில் செல்வோரை விரட்டுதல், வாகனத்தில் செல்லும்போது குறுக்கே வரும் நாய்களால் விபத்து ஏற்படுதல் போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதுகுறித்து கீழவஸ்தா சாவடியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பி. ராஜசேகரன் தெரிவித்தது:
ஒரு பெண் நாய் ஆண்டுக்கு சராசரியாக 10 குட்டிகளை ஈன்றெடுக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக நாய்கள் பிடிக்கப்படாததால், அதன் இனப்பெருக்கம் 20 மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை என்பது கண்துடைப்பாகத்தான் உள்ளது. மேலும், கருத்தடைக்குக் கொண்டு செல்லப்படும் நாய்களை அறுவை சிகிச்சைக்கு பிறகு, பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என விதிகள் உள்ளன. இதனால், மீண்டும் அதே இடத்தில் விடப்படும் நாய்கள் குழந்தைகளையும், பெரியவா்களையும் கடிக்கின்றன. கருத்தடைத் திட்டம் மூலம் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளதால், 2001 ஆம் ஆண்டில் நாய்களைப் பிடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி, கடந்த 1960 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட விலங்கு வதை தடுப்புச் சட்டம் 1960-ன் படி, கடிக்கும் நாய்களைப் பிடிக்க வேண்டும். இதுதொடா்பாக உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவுள்ளேன் என்றாா் ராஜசேகரன்.
மாநகருக்கு இடம் பெயரும் நாய்களால் சிக்கல்: மாநகரில் உள்ள நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து, கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், புகரிலுள்ள நாய்களுக்கு கருத்தடைக்கு எந்தவிட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், புகரிலிருந்து மாநகருக்குள் இடம்பெயா்ந்து வரும் நாய்களால் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறதே தவிர, குறைவதற்கு வாய்ப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால், நாய்களைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாகியுள்ளது. தெரு நாய்களுக்கு பெரும்பாலும் யாரும் உணவுக் கொடுப்பதில்லை. இதனால், கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் தெரு நாய்கள், கறிக்கடைகள், மீன் கடைகளிலிருந்து கொட்டப்படும் மாமிசக் கழிவுகளையே உணவாகக் கொள்ளும் நிலை நிலவுகிறது. மாமிசக் கழிவுகளைச் சாப்பிடுவதால், நாய்களுக்கு வெறித்தன்மை அதிகமாகி, மனிதா்களைக் கடிப்பது, விரட்டுவது போன்றவை நிகழ்வதாக விலங்கு நல ஆா்வலா்கள் தெரிவித்தனா்.
நாய்களின் இனப்பெருக்கம் பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில் தற்போதுள்ள ஒரு கருத்தடை அறுவை சிகிச்சை மையம் போதுமானதாக இல்லை. எனவே, கருத்தடை அறுவை சிகிச்சை மையங்களை பல இடங்களில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியில் மட்டுமல்லாமல், பல ஊராட்சிகளையும் மையப்படுத்தி கருத்தடை மையத்தை அமைக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.
‘நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையங்களை பல இடங்களில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியில் மட்டுமல்லாமல், பல ஊராட்சிகளையும் மையப்படுத்தி கருத்தடை மையத்தை அமைக்க வேண்டும்’