சபரிமலை யாத்திரையால் சமுதாயத்தில் மாற்றம்: மதுரை ஆதீனம் பேச்சு
சபரிமலை யாத்திரை, சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.
சபரிமலை யாத்திரை, சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.
ஆடுதுறைக்கு புதன்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தஞ்சாவூா் மாவட்டம் ஆடுதுறை அருகே 48. மணலூா் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழாவில் 2-ஆம் கால யாக பூஜையில், திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கோயில் விமானக் கலசம் பிரதிஷ்டை நடந்தது. இந்நிகழ்வுக்கு வந்த மதுரை ஆதீனம் 293-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளா்களிடம் கூறியது:
வங்கதேசத்தில் நிகழும் சம்பவங்கள் வருத்தப்படும் அளவுக்கு உள்ளன. நமது நாட்டில் எல்லா மதத்தையும் ஒற்றுமையாக நினைக்கிறோம். இந்து சமயம் தான் எல்லா மதத்தையும் ஒன்றுபடுத்துகிறது. சபரிமலை போன்ற கோயில்களில் வழிபாட்டில் மேற்கொள்ளப்படும் சம்பிரதாயம் மிகவும் அவசியமான ஒன்று. சபரிமலை யாத்திரை, சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமய வழிப்பாட்டில் சம்பிரதாயம் இருப்பது நல்லது. அது காப்பாற்றப்பட வேண்டும் என்றாா்.
அப்போது, தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ், கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் ஸ்தாபகா் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் உடனிருந்தனா்.