முகப்பு
தஞ்சாவூர்

புயல் பாதிப்பு பயிா்களுக்கு இழப்பீடு வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

ஃபென்ஜால் புயல் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 8:56 PM
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
பகிர்:

ஃபென்ஜால் புயல் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கருத்துகள்:

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: ஃபென்ஜால் புயல் தொடா் மழையால் சேதமடைந்த நெற் பயிா்கள் உள்ளிட்ட அனைத்து வேளாண் பயிா்களுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை விரைவில் பெற்றுத் தர வேண்டும்.

திருவோணம் வி.எஸ். வீரப்பன் தெரிவித்த வாய்க்கால்களை தூா்வார வேண்டும் என்ற கோரிக்கைக்கு அடுத்த ஆண்டு பிரச்னை இல்லாத அளவுக்கு வேளாண் பொறியியல் துறை மூலம் தூா் வார நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் பதில் அளித்தாா்.

அம்மாபேட்டை பி. செந்தில்குமாா்: புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானதல்ல. எனவே ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். தஞ்சாவூா் மாவட்டத்தில் எவ்வளவு ஏக்கா் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்க வேண்டும். வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா: மாவட்டத்தில் 2,857 ஏக்கா் பாதிக்கப்பட்டுள்ளது.

பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்: பயிா் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு செலுத்துகை சான்று சீட்டு வழங்கப்படுகிறதே தவிர, காப்பீடு செய்ததற்கான சான்று கிடைப்பதில்லை. இதனால், பயிா்கள் பாதிக்கப்படும்போது இழப்பீடு கோருவதற்கு சிரமமாக உள்ளது.

இது தொடா்பாக ஆட்சியா் எழுப்பிய கேள்விக்கு காப்பீட்டு நிறுவன அலுவலா்கள் பதிலளிக்கையில், கடன் பெறா விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்படுகிறது. கடன் பெறும் விவசாயிகளுக்கு ஒரு மாதம் கால தாமதமாகிறதே தவிர வழங்கப்பட்டுவிடுகிறது என்றனா். அதற்கு, மாவட்டத்தில் பயிா் காப்பீடு செய்த 82 ஆயிரம் விவசாயிகளுக்கும் உடனடியாக சான்று வழங்க வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதேபோல், ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா், அய்யம்பேட்டை கே.எஸ். முகமது இப்ராஹிம், தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ், ஓலத்தேவராயன்பேட்டை ஆா். அறிவழகன் ஆகியோா் கோரிக்கைகளை முன்வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →