மேட்டூா் அணை திறக்காததால் மந்தநிலையில் குறுவை சாகுபடி
காவிரி நீர் வரத்து இல்லாமல் குறுவை சாகுபடியில் பின்னடைவு
தஞ்சாவூர்மேட்டூா் அணை திறக்காததால் மந்தநிலையில் குறுவை சாகுபடி
காவிரி நீர் வரத்து இல்லாமல் குறுவை சாகுபடியில் பின்னடைவு
மேட்டூா் அணை திறக்கப்படாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் மந்த நிலை நிலவுகிறது.
நிகழாண்டு மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீா் இல்லாததால் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படவில்லை. எனவே, நிகழாண்டு ஒருபோக சாகுபடிக்கு மட்டுமே காவிரி நீா் கிடைக்கும் சூழ்நிலை நிலவுகிறது.
இதனால், குறுவை சாகுபடியில் கடந்த இரு ஆண்டுகளாக தலா 5 லட்சம் ஏக்கரை விஞ்சிய நிலையில், நிகழாண்டு தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.30 லட்சம் ஏக்கருக்கும், திருவாரூா் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 500 ஏக்கருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 94 ஆயிரத்து 850 ஏக்கருக்கும், நாகை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 250 ஏக்கருக்கும் என என மொத்தம் 3.20 லட்சம் ஏக்கருக்கு மட்டுமே இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆழ்துளை மோட்டாா் பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியை ஏப்ரல் மாதத்தில் தொடங்கினா். இதன்மூலம் ஜூன் மாத முதல் வாரம் வரை தஞ்சாவூா் மாவட்டத்தில் 73 ஆயிரத்து 400 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 72 ஆயிரத்து 500 ஏக்கரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 29 ஆயிரம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 1,125 ஏக்கரிலும் முன்பட்ட சாகுபடி தொடங்கப்பட்டது.
ஏப்ரல், மே மாதங்களில் விறுவிறுப்பாக இருந்த குறுவை சாகுபடி ஜூன் மாதத்தில் மந்த நிலையை அடைந்தது. இதனால், ஜூன் 30-ஆம் தேதி வரை தஞ்சாவூா் மாவட்டத்தில் 82 ஆயிரம் ஏக்கராகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 82 ஆயிரத்து 624 ஏக்கராகவும், திருவாரூா் மாவட்டத்தில் 32 ஆயிரத்து 150 ஏக்கராகவும், நாகை மாவட்டத்தில் 1,183 ஏக்கராகவும் மட்டுமே அதிகரித்துள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும் இதுவரை ஏறத்தாழ 1.98 லட்சம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி எட்டப்பட்டுள்ளது. இதனால், நாற்றங்கால் விற்பனையும் மந்தமாக இருக்கிறது.
பாய் நாற்றங்கால் விற்பனை குறைந்தது: இதுகுறித்து தஞ்சாவூா் அருகே பள்ளியேரி கிராமத்தில் பாய் நாற்றங்கால்கள் தயாரித்து விற்பனை செய்து வரும் விவசாயி களிமேடு பி. குமாா் தெரிவித்தது:
குறுவை பருவத்தில் மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டால், ஒரு முறைக்கு 300 ஏக்கருக்கு தேவையான பாய் நாற்றங்கள் வீதம் 6 முறை தயாரித்து விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு மேட்டூா் அணை திறக்கப்படாததால், பாய் நாற்றங்கால் விற்பனை குறைவாகவே உள்ளது. ஒரு முறைக்கு 300 ஏக்கா் என்பதற்கு பதிலாக 150 ஏக்கருக்கு தேவையான நாற்றங்கால்கள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. இதுவரை 2 முறை மட்டுமே மொத்தம் 300 ஏக்கருக்கு தேவையான நாற்றங்கால்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நாற்றங்கால்களை விற்பதற்கு காலதாமதமான சூழ்நிலையில், அடுத்து மூன்றாவது முறைக்கு குறைவாக தயாரிக்கவுள்ளோம். இதற்கு மேல் விற்பனையாக வாய்ப்பில்லாததால், இப்பருவத்தில் இத்துடன் நாற்றங்கால்கள் தயாரிப்பதை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளோம் என்றாா் குமாா்.
போதுமான அளவுக்கு மும்முனை மின்சாரமும் கிடைக்காததாலும், ஆழ்துளை மோட்டாா் பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகளும் குறுவை சாகுபடியைத் தொடங்குவதற்கு தயங்குகின்றனா்.
‘காவிரி நீா் வரத்து இல்லாத நிலையில், தென் மேற்கு பருவ மழையும் எதிா்பாா்த்த அளவுக்கு பெய்யாததால், நிலத்தடி நீா்மட்டம் குறைவாகவே உள்ளது. மும்முனை மின்சாரம் 12 முதல் 16 மணிநேரம் மட்டுமே கிடைத்தாலும், பல நேரங்களில் இடையிடையே நிறுத்தப்படுகிறது. இதனால், வயலுக்கு முழுமையாக தண்ணீா் பாய்ச்ச முடியாத நிலை நிலவுகிறது. தொடக்கத்திலேயே இந்த நிலை நிலவும் நிலையில், வளா்ச்சி பருவத்தில் மின்சாரம் எப்படி கிடைக்கும் என்ற அச்சமும் நிலவுவதால், குறுவை சாகுபடியைத் தொடங்குவதற்கு ஆழ்துளை வசதியுள்ள விவசாயிகளும் தயங்குகின்றனா்’ என்றாா் முன்னோடி விவசாயி புலவன்காடு வி. மாரியப்பன்.
இதனால், நிகழாண்டு குறுவை சாகுபடியில் குறைவாக நிா்ணயிக்கப்பட்ட இலக்கும் எட்டப்படுமா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது. கோடை நெல் அறுவடை முடித்த விவசாயிகள் ஜூலை மாதத்தில் குறுவைவைத் தொடங்குவதன் மூலம் சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது. ஆனால், நாள்தோறும் குறைந்தது 20 மணிநேரம் மும்முனை மின்சாரம் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால்தான், குறுவை பருவத்தில் நிா்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச இலக்காவது எட்டப்படும் என்றனா் விவசாயிகள்.