நலவாரிய இணையத்தில் தொழிலாளரின் புகைப்படம், கையொப்பம், அலுவலரின் கையொப்பமின்றி வரும் அடையாள அட்டை. dinmani online
தஞ்சாவூர்

நலவாரியத்தில் 44 லட்சம் தரவுகள் மாயம்: பணப் பலன்கள் பெற முடியாமல் தொழிலாளர்கள் தவிப்பு

இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஏறத்தாழ 44 லட்சம் தரவுகள் மாயமானதால், பணப் பலன்கள் பெற முடியாமல் நல வாரியத் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.

வி.என். ராகவன்

சென்னையில் கடந்த ஆண்டு பெய்த பெரு மழை காரணமாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஏறத்தாழ 44 லட்சம் தரவுகள் மாயமானதால், பணப் பலன்கள் பெற முடியாமல் நல வாரியத் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.

தொழிலாளர் நலத் துறையின் கீழ் 20 அமைப்புசாராத் தொழிலாளர்கள் நலவாரியங்கள் உள்ளன. இதில், கட்டுமானத் தொழிலாளர்கள், ஆட்டோ, தெரு வியாபாரிகள், கடை ஊழியர்கள், தையல் உள்ளிட்ட உடலுழைப்புத் தொழிலாளர்கள் என ஏறத்தாழ 44.09 லட்சம் பேர் உள்ளனர்.

நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து ஊனம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு, விபத்து மரணம், கண் கண்ணாடி, ஓய்வூதியம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

இந்த வாரியங்களில் தொழிற்சங்கத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர் கையொப்பம் மூலம் தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வந்தன. இது எண்மமயமாக்கம் செய்யப்பட்டு, இணையவழி மூலம் தொடர்புடைய தொழிலாளர்களே இ-சேவை மையம் மூலமாக நேரடியாகப் பதிவு செய்யும் முறை 2021-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தரவுகள் சென்னை பெருங்குடியிலுள்ள தனியார் நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 2023- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெருமழையால் தொழிலாளர் நலவாரிய இணையதள சர்வர்களில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டது. சர்வர்கள் இயங்காத நிலை ஏற்பட்டதால், தொழிலாளர்களால் பணப் பலன்கள் கோரி விண்ணப்பிக்க முடியவில்லை. இதையடுத்து, சர்வர்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டாலும், தொழிலாளர்களின் ஏறத்தாழ 44 லட்சம் தரவுகள் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதை மீட்பதற்கு தொழிலாளர் துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இன்னும் முழுமையாக மீட்டெடுக்க முடியாத நிலை தொடர்கிறது.

இதனால், தொழிலாளர்களின் அடையாள அட்டையில் புகைப்படம், அதிகாரிகளின் கையொப்பம், தொழிலாளர்களின் கையொப்பம் போன்றவற்றைக் காணவில்லை. இதன் காரணமாக தொழிலாளர்கள் இ-சேவை மையத்தில் மீண்டும் தங்களது விவரங்களைப் புதிதாக பதிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், புதிதாக பதிவு செய்தாலும், அது கிராம நிர்வாக அலுவலரிடம் செல்லும்போது, அங்கு தாமதம், நிராகரிப்பு போன்ற நடவடிக்கைகளால் தொழிலாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால், மீண்டும் பதிவு, புதுப்பிப்பு செய்வதில் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இந்த நிலைமை கடந்த 8 மாதங்களாக நிலவுவதால் பொருள் செலவு, அலைச்சல், நலவாரியத்தின் மீது நம்பிக்கையற்ற தன்மை போன்றவற்றால் தொழிலாளர்கள் அதிருப்திக்கு உள்ளாகின்றனர்.

எந்த நோக்கத்துக்காக இந்த வாரியம் தொடங்கப்பட்டதோ, அது நிறைவேறவில்லை. விண்ணப்பம் செய்த ஒரு மாதத்தில் பணப் பலன்கள் கிடைத்தால்தான், அது தொழிலாளர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். ஆறு மாதங்கள், ஓராண்டு கால தாமதமாவதால் எந்தப் பயனும் இல்லை. எனவே, தரவுகளை விரைவாகப் பதிவேற்றம் செய்து, பணப் பலன்களை விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் தொழிலாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT