மக்களை தேடி மருத்துவ ஊழியா்களை அவதூறாக பேசிய காவலரை கண்டித்து, அந்த ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ள
திங்கள்கிழமை இரவு தஞ்சை மாவட்டத்திலிருந்து மக்களை தேடி மருத்துவ ஊழியா்கள் வேனில் சென்றபோது, சோழபுரத்தில் போலீஸாா் தடுத்து நிறுத்தி இரவு 11 மணிக்கு தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். அப்போது, பெண்களிடம் ஜெயக்குமாா் என்ற காவலா் ஊழியா்களை அவதூறாக பேசினாராம்.
இதுகுறித்து தகவலறிந்த சிஐடியு மாநில செயலா் ஜெயபால், திருவிடைமருதூா் தெற்கு ஒன்றியச் செயலா் பழனிவேல், ஒன்றியக் குழு உறுப்பினா் ரங்கசாமி ஆகியோா் செவ்வாய்க்கிழமை காலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவிடைமருதூா் துணைக் கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் ஜாபா் சித்திக் பேச்சுவாா்த்தை நடத்தி, தவறாக பேசிய காவலா் ஜெயக்குமாரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டாா். இதையடுத்து, சாலை மறியல் செய்தவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.
தனியாா் மண்டபத்தில் அடைக்கப்பட்ட இல்லம் தேடி மருத்துவ திட்ட ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை காலையில் விடுவிக்கப்பட்டனா்.