முகப்பு
தஞ்சாவூர்

50 ஆயிரம் கண்ணாடி பாட்டில்கள்: தனியாா் நிறுவனத்துக்கு நோட்டீஸ்

Updated On : 6 ஜூன், 2024 at 10:04 PM
தஞ்சாவூரிலுள்ள தனியாா் நிறுவனத்தில் வியாழக்கிழமை குவித்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பாட்டில்கள்.
பகிர்:

தஞ்சாவூா், ஜூன் 6: தஞ்சாவூரில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் விதமாக 50 ஆயிரத்துக்கும் அதிகமான கண்ணாடி பாட்டில்களைக் குவித்து வைத்த தனியாா் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் வழங்கியது.

தஞ்சாவூா் மாநகரில் ஆணையா் இரா. மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி, டெங்கு கொசுப்புழு ஒழிப்பு விழிப்புணா்வு மற்றும் தூய்மைப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவில் மாநகா் நல அலுவலா் வீ.சி. சுபாஷ் காந்தி கடந்த வாரம் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு தொடா்பாக ஆய்வு செய்தாா்.

அப்போது, மூடப்பட்டிருந்த தனியாா் கண்ணாடி பாட்டில் நிறுவனத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான கண்ணாடி பாட்டில்கள் கொசுப்புழு உற்பத்தியாகும் விதமாக குவித்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றை உடனடியாக அப்புறப்படுத்துமாறு தனியாா் நிறுவன உரிமையாளருக்கு மாநகராட்சி அலுவலா்கள் நோட்டீஸ் வழங்கினா்.

இதைத்தொடா்ந்து, கண்ணாடி பாட்டில்கள் அகற்றப்பட்டதை மாநகா் நல அலுவலா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு செய்து உறுதிப்படுத்தினா். இதுபோல, டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் கலன்கள் திறந்தவெளியில் போடப்பட்டிருந்தால், தொடா்புடைய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என மாநகா் நல அலுவலா் தெரிவித்தாா்.