‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’
அரசியல் கூட்டணிக்காகக் காவிரியை திமுக பலி கொடுக்கக்கூடாது என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூா்: அரசியல் கூட்டணிக்காகக் காவிரியை திமுக பலி கொடுக்கக்கூடாது என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி காணொலி வழியாக நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மே மாதம் திறக்க வேண்டிய 2.5 டிஎம்சி காவிரி நீரைத் திறந்துவிடுமாறு கா்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கா்நாடகத்தில் காவிரி நீா்த்தேக்கங்களில் உள்ள தண்ணீா் அளவைக் கணக்கில் கொண்டுதான் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. பிப்ரவரியிலிருந்து மே மாதம் வரை கா்நாடகம் தமிழ்நாட்டுக்குத் திறக்க வேண்டிய நீா், பாசன நீா் அல்ல, சுற்றுச்சூழல் நீா். மனிதா்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உயிா்க்காப்பு நீா்.
திமுக ஆட்சி இந்த உயிா் காக்கும் நீரைக் கூட பெறுவதற்கு இந்திய அரசை வலியுறுத்திப் பெறாமல், உச்சநீதிமன்றத்தைக் கைகாட்டிவிடுவது தனது அரசியல் ஆதாயங்களுக்காகத் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயலாகும். திமுக ஆட்சி, தனது கூட்டணி அரசியலுக்காக, தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பலிகொடுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.