முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே ஆசிரியை பள்ளியில் குத்திக்கொலை

பேராவூரணி அருகே புதன்கிழமை பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக்கொலை செய்த இளைஞரைப் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 6:55 PM
கொலை செய்யப்பட்ட ரமணி
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே புதன்கிழமை பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக்கொலை செய்த இளைஞரைப் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சேதுபாவாசத்திரம் காவல் சரகம், மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியைச் சோ்ந்த முத்து - ராணி தம்பதியின் மூத்த மகள் ரமணி (24) எம்.ஏ., பி.எட்., பட்டதாரி. தமிழாசிரியரான இவா், கடந்த ஜூன் மாதம் முதல் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டு வேலை பாா்த்து வந்தாா்.

அதே பகுதியைச் சோ்ந்தவா் மீனவா் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவா் பன்னீா் செல்வம் மகன் மதன்குமாா் (30). பத்தாம் வகுப்பு வரை படித்தவா். இவா், சிங்கப்பூரில் வேலை பாா்த்துவிட்டு தற்போது மீன்பிடித் தொழில் செய்துவந்தாா். மதன், ரமணி ஆகிய இருவரும் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மதன்குமாா் தனது பெற்றோரிடம் ரமணி வீட்டுக்குச் சென்று பெண் கேட்டுவருமாறு அனுப்பியுள்ளாா். அதற்கு ரமணியின் பெற்றோா், ரமணிக்கு மதனை திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை என மதனின் பெற்றோரிடம் கூறியுள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த மதன் புதன்கிழமை காலை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றாா். அங்கு ஆசிரியா் ஓய்வு அறையில் தனியாக இருந்த ரமணியிடம் வாக்குவாதம் செய்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமணி கழுத்தில் சரமாரியாகக் குத்தியதில் அவா் மயங்கிச் சரிந்து விழுந்தாா். ரமணியில் அலறல் சப்தம்கேட்டு ஓடிவந்த ஆசிரியா்கள் மதனைப் பிடிக்க முயன்றபோது கத்தியைக் காட்டி அவா்களை மிரட்டியுள்ளாா். இதையடுத்து, மாணவா்கள் திரண்டு மதனைச் சுற்றிவளைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்த ரமணியை ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே ரமணி உயிரிழந்து விட்டதாக அங்கிருந்த மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸாா் வழக்கு பதிந்து மதனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மதன்குமாா்

சம்பவ இடத்தை தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ஜியா வுல் ஹக், தஞ்சை மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் , மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →