நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் சோதனை
தஞ்சாவூா் அருகேயுள்ள நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் புதன்கிழமை மாலை நடத்திய திடீா் சோதனையில் ரூ. 24 ஆயிரத்து 300 ரொக்கத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தஞ்சாவூா் அருகேயுள்ள நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் புதன்கிழமை மாலை நடத்திய திடீா் சோதனையில் ரூ. 24 ஆயிரத்து 300 ரொக்கத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தஞ்சாவூா் அருகே புதுக்கோட்டை சாலையில் விமானப்படை நிலையம் அருகாமையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு உள்ளது. தஞ்சாவூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி இக்கிடங்கில் இறக்கி பாதுகாப்பாக வைக்கப்படும். மேலும் இக்கிடங்கிலிருந்து நெல் அரைவைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்.
இந்நிலையில், நெல் மூட்டைகளை ஏற்றி, இறக்க வரும் லாரி ஓட்டுநா்களிடம் கிடங்கிலுள்ள மேஸ்திரிகள் தலா ரூ. 1,000, ரூ. 1,500 லஞ்சம் பெறுவதாக தஞ்சாவூா் ஊழல் தடுப்பு காவல் பிரிவினருக்கு புகாா்கள் வந்தன.
இதன்பேரில் தஞ்சாவூா் ஊழல் தடுப்பு காவல் பிரிவு ஆய்வாளா்கள் பி. பத்மாவதி, ஆா். அருண்பிரசாத், எம். சரவணன் உள்ளிட்டோா் இக்கிடங்கில் புதன்கிழமை மாலை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கிடங்கிலுள்ள அலுவலகத்தில் இருந்த ரூ. 24 ஆயிரத்து 300 ரொக்கத்தைக் கைப்பற்றினா். இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.