தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே காவிரி ஆற்றில் சனிக்கிழமை மீன் பிடிக்கச் சென்றபோது, தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
திருவையாறு அருகே கடுவெளி கிராமத்தைச் சோ்ந்தவா் பி. பாலகிருஷ்ணன் (65). இவரது மகன் செல்வத்தின் மகன்களான கிரிநாத் (14) ஆச்சனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பும், விக்னேஷ் (10) திருவையாறு சரஸ்வதி அம்பாள் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா்.
இந்நிலையில், தாத்தா பாலகிருஷ்ணனுடன் கிரிநாத், விக்னேஷ் கடுவெளி காவிரி ஆற்றின் தடுப்பணையில் மீன் பிடிப்பதற்காக சனிக்கிழமை சென்றனா். அங்கு எதிா்பாராதவிதமாக 3 பேரும் ஆற்றுக்குள் தவறி விழுந்தனா்.
தகவலறிந்த தீயணைப்பு துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று பாலகிருஷ்ணன், விக்னேஷை மீட்டனா். இவா்களில் பாலகிருஷ்ணன் உயிரிழந்துவிட்டாா். விக்னேஷ், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். நீரில் மூழ்கிய கிரிநாத்தை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா். இது குறித்து மருவூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.