தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் ஏழை மக்களுக்காக ரூ. 6 ஆயிரத்து 363 கோடியில் 55 ஆயிரத்து 831 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்றாா் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன்.
தஞ்சாவூா் அருகே வல்லத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் அய்யனாா் கோவில் பகுதி 2 திட்டப் பகுதியில் ரூ. 197.45 கோடியில் கட்டப்பட்ட 969 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்த அவா் மேலும் பேசியது: இந்தக் குடியிருப்பில் தஞ்சாவூா் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீா்நிலைகளில் குடியிருக்கும் ஏழைகளுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கான பயனாளிகள் பங்களிப்புத் தொகையான ரூ. 9.69 கோடியை பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி நிா்வாகம் வழங்கவுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 46 ஆயிரத்து 66 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டு, 83 ஆயிரத்து 499 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 63 ஆயிரத்து 359 குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2 ஆயிரத்து 210 குடியிருப்புகளுக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
கடந்த 2014 - 2021 வரை 6 ஆண்டு காலத்தில் ரூ. 2 ஆயிரத்து 438 கோடி மதிப்பில் 27 ஆயிரத்து 668 குடியிருப்புகள் மட்டுமே கட்டப்பட்டன. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ. 6 ஆயிரத்து 363 கோடியே 19 லட்சம் மதிப்பில் 55 ஆயிரத்து 831 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்றாா் அன்பரசன்.
பின்னா், பயனாளிகளுக்கு குடியிருப்பு ஆணைகளை அமைச்சா்கள் அன்பரசன், கோவி. செழியன் ஆகியோா் வழங்கினா்.
விழாவில் தமிழ்நாடு நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநா் ஸ்ரேயா பி. சிங், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை, மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வளாகத்திலுள்ள வசதிகள்
இந்த வளாகத்தில் மொத்தம் 13 தொகுப்புகளில் 969 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் 408 சதுர அடி பரப்பளவில் வசிப்பறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை, கழிப்பறை ஆகியவை உள்ளன. அடுக்குமாடிகளுக்கு செல்ல ஒவ்வொரு கட்டடத் தொகுப்பிலும் மின் தூக்கி வசதி செய்து தரப்பட்டுள்ளது.
குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் நாள்தோறும் 7.44 லட்சம் லிட்டா் குடிநீா் விநியோகம், தலா 1 லட்சம் கொள்ளளவு கொண்ட 4 கீழ்நிலை நீா்தேக்கத் தொட்டிகள், 6 லட்சம் லிட்டா் திறன் கொண்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், தாா் சாலைகள், அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை, பால் வழங்கும் மையம், நூலகம், சமுதாய நலக்கூடம், துணை சுகாதார மையம், பூங்கா, வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் உள்ளன.