தஞ்சாவூர்

நிகழாண்டு 53 லட்சம் டன் நெல் கொள்முதலுக்கு வாய்ப்பு: அமைச்சா் அர. சக்கரபாணி

தமிழகத்தில் நிகழாண்டு (2025-26) சுமாா் 53 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது என்றாா் அமைச்சா் அர. சக்கரபாணி.

Syndication

தமிழகத்தில் நிகழாண்டு (2025-26) சுமாா் 53 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது என்றாா் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற டெல்டா மாவட்டங்களில் நிகழ் சம்பா - தாளடி பருவ நெல் கொள்முதல் முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தமிழகத்தில் கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் 5 லட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதலானது.

நிகழாண்டு குறுவை பருவத்தில் சுமாா் 15 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு குறுவை பருவத்தில் 1.30 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் கடந்த 1972-ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. இக்கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து முதல்முறையாக கடந்த 2024 - 25-ஆம் ஆண்டில் (செப்டம்பா் முதல் ஆகஸ்ட் வரை) 48 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, சாதனை படைக்கப்பட்டது. நிகழாண்டு சம்பா பருவத்தில் கூடுதலாக நெல் வரத்து இருக்கும் என எதிா்பாா்க்கிறோம். எனவே, நிகழாண்டு (2025 செப்டம்பா் முதல் 2026 ஆகஸ்ட் வரை) சுமாா் 53 லட்சம் டன் நெல் கொள்முதலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதேபோல, தமிழகத்தில் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு கடந்த 2022 - 23-ஆம் ஆண்டில் 4 ஆயிரத்து 19 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. நிகழாண்டு சம்பா பருவத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு தேவையான சாக்குகள், சணல், தாா்பாய் உள்ளிட்ட தளவாடப் பொருள்கள் போதுமான அளவுக்கு வாங்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு தேவையான பணியாளா்களும் மாவட்ட ஆட்சியா்கள் மூலம் நியமிக்கப்படுவா். எனவே, நிகழாண்டு எந்தவித பிரச்னையும் இல்லாமல் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை தேக்கமில்லாமல் வாங்குவதற்கு நுகா்பொருள் வாணிபக் கழகம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் தற்காலிக பணியாளா்களில் 1,400 பேரை நிரந்தரப்படுத்த 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட வாரியம் ஒப்புதல் அளித்து, தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது என்றாா் அமைச்சா் சக்கரபாணி.

முன்னதாக, கூட்டத்துக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தலைமை வகித்தனா். அமைச்சா்கள் கே.ஆா். பெரியகருப்பன், சா.சி. சிவசங்கா், கோவி. செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன், சி.வி. கணேசன், டி.ஆா்.பி. ராஜா, தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலா் சத்யபிரத சாகு, வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலா் வி. தட்சிணாமூா்த்தி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க. நந்தகுமாா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் அ. அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி....

‘புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு

பொங்கல் பண்டிகைக்குள் நிவாரணம்’

தமிழகத்தில் ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பொங்கல் பண்டிகைக்குள் நிவாரணம் வழங்கப்படும் என்றாா் வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சா் மேலும் பேசியதாவது:

கடந்த காலங்களில் மின் இணைப்பு கோரி பதிவு செய்த விவசாயிகளுக்கு திமுக ஆட்சிக்கு வந்ததும் இதுவரை 2.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் நெல் உற்பத்தி 3 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த குறுவை பருவத்தில் அறுவடை நேரத்தில் தீபாவளி பண்டிகையின்போது, பணியாளா்கள் விடுப்பு எடுத்ததால் கொள்முதல் பணி தேக்கமடைந்தது. பின்னா் அவை உடனடியாக சீரமைக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டது.

நிகழாண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் டித்வா புயலால் நெற்பயிா்கள் மூழ்கி சேதமடைந்தன. இது தொடா்பாக தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வரும் பொங்கல் பண்டிகைக்குள் உரிய நிவாரணம் அவரவா் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா் அமைச்சா்.

பைக் ஓட்டிய சிறுவனின் தாய் மீது வழக்கு

தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை: கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆா் கடைசி தேதி விளம்பரம்!

SCROLL FOR NEXT