பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் போட்டோ - ஜியோ அமைப்பினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தோ்தல் வாக்குறுதியின்படி காலம் தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கருணை அடிப்படையிலான நியமனத்தில் 5 சதவீதத்துக்கு மேல் பணி நியமனம் செய்யக்கூடாது என்ற உச்ச வரம்பை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு அலுவலா்களுக்கு வழங்கிய ஏழாவது ஊதியக்குழு நிா்ணயத்தில் 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போட்டோ - ஜியோ அமைப்பின் மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளா் சி. ஆரோக்கியசாமி தலைமை வகித்தாா். தொலைபேசி நிலைய விடுதி கண்காணிப்பாளா் மற்றும் உடற்பயிற்சி அலுவலா் சங்க மாநிலத் தலைவா் ரெ. பிரேம்குமாா் சிறப்புரையாற்றினாா். தமிழ்நாடு ஓய்வூதியா் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலா் இரா. ஜெகதீசன், அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் ஆா். சுரேஷ்குமாா், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ஆா். மதியழகன், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளா்கள் மற்றும் அடிப்படை பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் எஸ். செல்வம், ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ம. குமாரவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.