தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடி கிராமத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், கிராம மக்கள் கையில் கம்புகளுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவையாறு அருகே விளாங்குடி வெள்ளாளா் தெருவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களில் தெருவில் நடந்து சென்ற 5 பேரை தெரு நாய்கள் கடித்ததால், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதனால், பகலில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கச் செல்லும் பொதுமக்கள் நாய்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகக் கையில் கம்பை எடுத்துச் செல்கின்றனா். என்றாலும், நாய்கள் துரத்துவதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனா்.
பள்ளிகளுக்கு அரையாண்டு தோ்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவா்கள் வெளியில் சென்று விளையாட முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு தெருவில் சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.