தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் இதுவரையில் 2.24 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.2) வரை 2.24 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே தேதியில் 1.15 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் முதல் நவம்பா் வரை 3 மாதங்களுக்கு குறுவை பருவத்தில் 1.28 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் நிகழாண்டு செப்டம்பா், அக்டோபா் ஆகிய இரு மாதங்களில் 2.24 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 90 சதவீதம் அதாவது 2.01 லட்சம் டன் நெல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து இயக்கம் செய்யப்பட்டுள்ளது.
முழுவதும் மூடிய 25 கிடங்குகளில் 86 ஆயிரத்து 103 டன்னும், மேற்கூரையுடன் கூடிய 9 கிடங்குகளில் 75 ஆயிரத்து 719 டன்னும் என மொத்தம் 1.61 லட்சம் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நாள்தோறும் ஏறத்தாழ 1,000 லாரிகள் நெல், அரிசி இயக்கப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. நாள்தோறும் இரண்டு ரயில் முனையங்களிலிருந்து 4 ஆயிரம் டன் நெல் வெளி மாவட்டங்களுக்கு இயக்கம் செய்யப்படுகிறது. இதுவரை ரயில் மூலமாக 1.01 லட்சம் டன்னும், சாலை வழியாக 11 ஆயிரத்து 172 டன்னும் நெல் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 44 ஆயிரத்து 288 விவசாயிகளுக்கு ரூ. 541 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.