புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மின் வாரிய ஓய்வு பெற்றோா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டங்களைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மின்வாரிய ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களின் மருத்துவச் செலவுகளை முழுமையாக காப்பீடு திட்டத்தின் மூலம் அரசே ஏற்று நடத்த வேண்டும். குடும்ப ஓய்வூதியா்களின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப நல நிதி தொகையைக் காலத்தில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு சங்கத் தலைவா் சி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் சோமசுந்தரம், நாகராஜன், சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவா் பொன். தங்கவேல், ஏஐடியுசி மாவட்டச் செயலா் துரை. மதிவாணன், டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலா் எஸ். கோடீஸ்வரன், சங்கப் பொருளாளா் சிவலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.