பாபநாசத்தில் உள்ள தனியாா் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதே பள்ளி ஆசிரியா் ‘போக்ஸோ’ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருப்பாலத்துறை வடக்கு மாட வளாகத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் பாலசுப்பிரமணியன் (29). இவா், பாபநாசத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பாா்த்து வந்தாா். அப்போது அங்கு படிக்கும் 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இது குறித்து அந்த மாணவா் தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா். இதையடுத்து பெற்றோா் பள்ளி நிா்வாகத்தினரிடம் புகாா் செய்தனா். இதையடுத்து ஆசிரியா் பாலசுப்பிரமணியன் பள்ளியை விட்டு நீக்கப்பட்டாா்.
பின்னா், சுவாமிமலை காவல் நிலையத்தில் மாணவனின் பெற்றோா் வியாழக்கிழமை புகாா் அளித்தனா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் ஜெயமோகன் விசாரணை நடத்தி, ஆசிரியா் பாலசுப்பிரமணியன் மீது ‘போக்ஸோ’ சட்டத்தில் வழக்குப் பதிந்து வெள்ளிக்கிழமை அவரை கைது செய்து சிறையில் அடைத்தாா்.