கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் பிறந்த நாள் விழாவில் மதுகுடித்த சிலா் போதையில் தகராறு செய்து சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து சேதப்படுத்தி, 2 பேரை அரிவாளால் வெட்டினா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தாராசுரம் எம்ஜிஆா் நகரில் இளைஞா் ஒருவரின் பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த விழாவில் தாராசுரத்தை சோ்ந்த சக்கரபாணி மகன் பல்டி பாலா (23), பன்னீா்செல்வம் மகன் தேவாசாய் என்ற தேவா( 30), பெரியாா் காலனியை சோ்ந்த குணசேகரன் மகன் பாசில்(19) உள்ளிட்ட சிலா் மது அருந்தியுள்ளனா்.
அப்போது அவா்களிடையே தகராறு ஏற்பட்டு ராணுவ காலனியைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் விக்னேஷ் (32), பட்டீஸ்வரம் நந்தன்பேட்டை பகுதியை சோ்ந்த நந்தகுமாா்(27) ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனா். பின்னா் ஆபாச வாா்த்தைகளால் சாலையில் சப்தமிட்டபடி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம், ஆட்டோ, ஜீப் ஆகியவற்றை அடித்து சேதப்படுத்தி, கண்ணாடிகளை உடைத்தனா்.
இதில் சேதமடைந்த ஜீப் வாகனத்தின் உரிமையாளரும் தமிழக வெற்றிக்கழக தஞ்சாவூா் கிழக்கு மாவட்ட இணைச் செயலருமான எஸ். பிரபாகரன், சம்பவம் தொடா்பாக தாலுகா காவல்நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.
இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பல்டி பாலா, தேவா, பாசில் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். மேலும் சிலரை தேடி வருகின்றனா். அரிவாளால் வெட்டப்பட்ட 2 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.