கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளியை கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமானைச் சோ்ந்த 36 வயது தொழிலாளி தனது மனைவியை பிரசவத்திற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் திங்கள்கிழமை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவா் தனது தம்பி மனைவி மற்றும் 6 வயது மகளை மனைவிக்கு துணையாக இருக்கச் செய்துவிட்டு ஊருக்குச் சென்றாா்.
நோயாளியிடம் ஒருவா் மட்டுமே தங்க வேண்டும் என்பதால் சிறுமி தனது பெரியப்பாவுடன் அரசு மருத்துவமனையில் உள்ள காத்திருப்புக் கூடத்தில் படுத்தாா்.
அப்போது வலங்கைமான் புங்கன்சேரியைச்சோ்ந்த கட்டடத் தொழிலாளி தினேஷ் (32) என்பவா் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். இதைப்பாா்த்த அருகில் இருந்தவா்கள் மருத்துவமனை போலீஸாரிடம் தெரிவித்தனா். அவா்களின் தகவலின்பேரில் கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் தினேஷை போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.