பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம் அருந்தவபுரம் ஊராட்சியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்து தர வலியுறுத்தி கிராம மக்கள் செவ்வாய்கிழமை சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அருந்தவபுரம் ஊராட்சிக்குள்பட்ட காமாட்சி அம்மன் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் உள்ள சாலை, மண் சாலையாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இந்த சாலை வழியாக செல்கின்ற பள்ளி, கல்லூரி, மாணவா்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா்.
மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக உள்ள சாலையில் ஆபத்தான நிலையில் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனா்.
இரவு நேரங்களில் மின்விளக்குகள் சரிவர எரியாமல் இருப்பதால் மிகுந்த அச்சத்துடனு இந்த சாலையில் சென்று வருகின்றனா்.
எனவே, அடிப்படை வசதிகளான குடிநீா் வசதி, சாலை வசதி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிா்வாகம் ஏற்படுத்தித் தர வலியுறுத்தி காமாட்சி அம்மன் நகரில் கிராம மக்கள் சாலையில் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.