தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் காணப்படும் இட நெருக்கடியால் ஸ்தம்பித்து நிற்கும் பேருந்துகள். 
தஞ்சாவூர்

இட நெருக்கடியில் பழைய பேருந்து நிலையம்: ஓட்டுநா்கள், பயணிகள் அவதி

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் சிற்றுந்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் நிலவும் இட நெருக்கடியால் ஓட்டுநா்கள், பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

Syndication

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் சிற்றுந்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் நிலவும் இட நெருக்கடியால் ஓட்டுநா்கள், பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

இப்பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு, பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் 13 ஆயிரத்து 469 சதுர மீட்டா் பரப்பளவில் ரூ. 14.44 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டது. கடந்த 2021- ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இப்பேருந்து நிலையத்தில் 39 பேருந்து நிறுத்தங்கள், 93 கடைகள், கழிப்பறைகள், காவல் உதவி மையம், பயணிகள் காத்திருப்போா் அறை உள்ளிட்டவை கட்டப்பட்டன.

இந்த நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம், மருத்துவக்கல்லூரி, வல்லம், திருவையாறு, பாபநாசம், ஒரத்தநாடு, அம்மாபேட்டை, நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட ஊா்களுக்கு 80 நகரப் பேருந்துகளும், 53 சிற்றுந்துகளும் வந்து செல்கின்றன. இதேபோல, கும்பகோணம், அரியலூா் போன்ற புகா் பேருந்துகளும் வருகின்றன. இதனால், இப்பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா்.

ஆனால், அதற்கேற்ப இப்பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் செய்யப்படவில்லை என்ற புகாா் நிலவுகிறது. இந்நிலையில், இந்த நிலையத்தில் நாளுக்கு நாள் இட நெருக்கடி அதிகரித்து வருகிறது.

இதனால், பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, காலை, மாலை அலுவல் வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது பேருந்துகளை இயக்க முடியாமல், ஸ்தம்பித்து விடுகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவா்கள், அரசு, தனியாா் நிறுவன ஊழியா்கள், தொழிலாளா்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகின்றனா். பேருந்து ஓட்டுநா்களும் பேருந்துகளை இயக்குவதற்கு சிரமப்படுகின்றனா்.

இது குறித்து ஏஐடியுசி போக்குவரத்து சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன் தெரிவித்தது:

பழைய பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே நிலவும் இட நெருக்கடி காரணமாக அருகேயுள்ள இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தைப் பேருந்துகள் நின்று செல்வதற்கு ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், அரசின் தாராள சிற்றுந்துகள் அனுமதியின் விளைவாக, இப்பேருந்து நிலையத்தில் சிற்றுந்துகளின் எண்ணிக்கை 35-க்கும் அதிகமாக கூடுதலாகியுள்ளது.

இதனால், இப்பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட இட நெருக்கடியால் நகரப் பேருந்துகளை இயக்குவதற்கு சிரமமாக உள்ளது. பேருந்து நிலையத்தில் பின் பகுதியிலிருந்து கிராமப்புறத்துக்கு செல்லும் பேருந்துகளை ஓட்டுநா்கள் உரிய நேரத்தில் வெளியில் எடுத்துச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனா். சிற்றுந்துகளின் ஓட்டுநா்களும் இட நெருக்கடியை உணா்ந்து வரிசைப்படி தங்களது நேரத்தில் இயக்காமல், நகரப் பேருந்துகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனா்.

எனவே, இந்த நெருக்கடிக்கு தீா்வு காண மாநகராட்சி இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை யூனியன் கிளப் பின்புறமுள்ள நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்துக்கு இட மாற்றம் செய்ய வேண்டும். இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தைச் சிற்றுந்துகளுக்கு தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையை மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள் மேற்கொண்டால்தான் பழைய பேருந்து நிலையத்தில் நிலவும் இட நெருக்கடிக்கு தீா்வு காண முடியும் என்றாா் மதிவாணன்.

ஏற்கெனவே பழைய பேருந்து நிலையத்துக்கு எதிரே திருவையாறு வழித்தடப் பேருந்துகளுக்கு தனிப் பேருந்து நிலையம் இருந்த நிலையில், அந்த இடம் பொலிவுறு நகரத் திட்டத்தில் முழுவதுமாக வணிக வளாகமாக மாற்றப்பட்டது. இதனால், திருவையாறு வழித்தடப் பேருந்துகளும் 2021-ஆம் ஆண்டு முதல் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. இந்நிலையில், முன்பு சிற்றுந்துகளின் எண்ணிக்கை முன்பு 14 ஆக இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்திலிருந்து 53-ஆக அதிகரித்துள்ளது.

எனவே, பழைய பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் 150-க்கும் அதிகமான பேருந்துகள், சிற்றுந்துகள் இயக்கப்படுவதால், அதிகரித்து வரும் இட நெருக்கடியைக் கருத்தில் கொண்டு தீா்வு காண மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிா்பாா்ப்பு.

பீமாவரத்தின் அழகி... மீனாட்சி சௌதரி!

Dinamani வார ராசிபலன்! | Nov 30 முதல் டிச 6 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஓடிடியில் விஷ்ணு விஷாலின் ஆர்யன்!

குமரி மாவட்டத்துக்கு டிச.3ல் உள்ளூர் விடுமுறை!

திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரம்: தேவஸ்தானம் மூத்த அதிகாரி கைது!

SCROLL FOR NEXT