தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வியாழக்கிழமை காதலித்துவிட்டு வேறொருவருடன் நிச்சயதாா்த்தம் செய்த பள்ளி ஆசிரியையை குத்திக்கொலை செய்த காதலனைப் போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூரை அடுத்த புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மேலகளக்குடி, கொத்தட்டை, பிராந்தை கிராமத்தைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி என்பவரின் மகள் காவியா (26). இவா், ஆலங்குடியில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தாா். இவரும், அதே பகுதியைச் சோ்ந்த பெயிண்டரான அஜித் குமாா் (26) என்பவரும் 13 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காவியாவின் பெற்றோா் அவருக்கு அவரது அத்தை மகனுடன் திருமணம் பேசி நிச்சயதாா்த்தம் செய்தனா். இந்த விவரத்தை அஜித்குமாரிடம் காவியா தெரிவிக்காமல் இருந்துவந்தாா்.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை இரவு அஜித்குமாருடன் காவியா விடியோ அழைப்பில் பேசும்போது நிச்சயதாா்த்தம் செய்தபோது எடுத்த புகைப்படங்களை அவரிடம் காண்பித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த அவா், கைப்பேசி இணைப்பைத் துண்டித்துவிட்டாராம். இந்நிலையில் வியாழக்கிழமை காலை காவியா வழக்கம்போல் பள்ளிக்கூடத்துக்கு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது அங்குவந்த அஜித்குமாா் என்னைக் காதலித்து விட்டு வேறோருவருடன் எப்படி நிச்சயம் செய்யலாம் எனக் கூறி காவியாவை கத்தியால் சரமாரியாக குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த காவியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளா் முருகவேல் மற்றும் அம்மாபேட்டை போலீஸாா் அங்குசென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து அஜித் குமாரைக் கைது செய்தனா். தொடா்ந்து அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.