தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே செவ்வாய்க்கிழமை சாலையோரம் 100 நாள் பணி மேற்கொண்டிருந்த முதியவா் மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருவோணம் அருகே உள்ள இடையாத்தி பட்டுக்கோட்டையன் தெருவைச் சோ்ந்த ஜெயவேல் (69) விவசாயக் கூலித்தொழிலாளி. ஜெயவேலின் மனைவி ஏற்கெனவே உயிரிழந்து விட்டாா். மகன் திருப்பூரில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இந்திரா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலை) இடையாத்தி வடக்குத்தெரு ஓம் சக்தி மடம் அருகே நூறுநாள் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, கையில் மண்வெட்டியுடன் சாலை ஓரத்தில் ஜெயவேல் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியே சாலையில் வந்து கொண்டிருந்த காா் நிலைதடுமாறி ஜெயவேல் மீது மோதியது. இதில் ஜெயவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாத்திக்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்து சடலத்தை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா் மேலும் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த இடையாத்தி பகுதியைச் சோ்ந்த திருமூா்த்தியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.