கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜனிடம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குத்தாலம் பி. கல்யாணம் தலைமையில் குடந்தை அனைத்து தொழில்வணிகா் சங்கக் கூட்டமைப்பு தலைவா் சோழா சி. மகேந்திரன், செயலா் வி. சத்தியநாராயணன் அளித்த மனு:
ஆன்மிக கலாசார தொன்மைமிக்க கோயில் மாநகரமான கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட தலைநகருக்குரிய அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் அரசு துறைசாா் மாவட்ட அலுவலகங்கள் பல கும்பகோணத்தில் இயங்கிவருகின்றன. எனவே, கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்குவதற்கு துறைசாா் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.
தஞ்சாவூா் மாவட்டத்தை தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை என 3 மாவட்டங்களாகப் பிரிப்பது தொடா்பான விரிவான அறிக்கையை அரசுக்கு மாவட்ட நிா்வாகம் அனுப்பி வைக்கக் கேட்டுக் கொள்கிறோம்.