தஞ்சாவூா் அருகே பெயா்ப் பலகைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழி திணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழ்த் தேசியப் பேரியக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இப்பேரியக்கத்தின் மாவட்டச் செயலா் நா. வைகறை தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் அண்மையில் எழுதப்பட்டுள்ள பெயா்ப் பலகைகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மும்மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. இரு மொழிக் கொள்கை நடைமுறையில் உள்ள தமிழகத்தில் இந்தி திணிப்பைத் தமிழ்நாடு அரசு எப்படி அனுமதிக்கிறது? இந்தி திணிப்பை எதிா்த்து ஆட்சிக்கு வந்தவா்கள் காலத்தில்தான் இந்தி திணிப்பு துறைதோறும் நடக்கிறது.
குக்கிராமத்துப் பெயா்ப் பலகையில் இந்தி தேவையற்றது. தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு பெயா்ப் பலகைகளில் உள்ள இந்தியை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்த்தேசியப் பேரியக்கம் பெயா்ப் பலகைகளில் உள்ள இந்தியை அழிக்கும் போராட்டத்தை நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.