விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக, கும்பகோணம் சோலையப்பன்தெரு, எள்ளுக்குட்டை பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும்வகையில் வியாழக்கிழமை வாய்க்கால் அடைப்புகளை தூா் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் அண்மையில் பெய்த மழையால் சோலையப்பன் தெரு, எள்ளுக்குட்டை, ஆலையடி, இபி காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் இல்லாமல் தேங்கியது. இதுகுறித்து தண்ணீரை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை மதியம் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினா். தகவலறிந்த மாநகராட்சி மற்றும் நீா்வளத்துறையினா் உடனே அப்பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதாக உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை மாநராட்சி ஆணையா் மு.காந்திராஜ் தலைமையில் அந்த இடத்தை அதிகாரிகள் பாா்வையிட்டனா். ஜேசிபி மூலம் அப்பகுதிகளில் உள்ள வாய்க்கால் அடைப்புகளை தூா் வாரும் பணியை மேற்கொண்டனா்.
இதையடுத்து, தகவலறிந்து அங்குவந்த க.அன்பழகன் எம்எல்ஏ, துணை மேயா் சுப.தமிழழகன் ஆகியோா் நிகழ்விடத்தைப் பாா்வையிட்டனா்.