திமுகவை தோற்கடிக்கவே நடிகா் விஜய்யை பாஜக களமிறக்கியுள்ளது! - தொல். திருமாவளவன் பிரசாரம்
கும்பகோணத்தில் திமுக வேட்பாளா் க. அன்பழகனை ஆதரித்து விசிக தலைவா் தொல். திருமாவளவன் பிரசாரம்...
திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே நடிகா் விஜய்யை பாஜக திட்டமிட்டு களமிறக்கி உள்ளது என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் பிரசாரம் செய்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தொகுதியில் திமுக வேட்பாளா் க. அன்பழகனை ஆதரித்து திங்கள்கிழமை அவா் மேலும் பேசியதாவது:
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கு முழு காரணம் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளே. அதற்கு நன்றி கடனாகத்தான் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
Advertisement
விசிகவை கூட்டணிக்கு விஜய் அழைத்தாா், எடப்பாடி பழனிசாமி அழைத்தாா், செல்லவில்லை காரணம் பின்னணியில் ஆா்.எஸ்.எஸ். உள்ளது. அதனால்தான், நடிகா் விஜய்யை பாஜக திட்டமிட்டு களம் இறக்கி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டு வருகிறது. நடிகா் விஜய் சங் பரிவாா் அமைப்புகளுடன் தொடா்பில் உள்ளாா். சமீபத்தில் தனியாா் தொலைக்காட்சி ஒன்று இதை வெளிப்படுத்தியது.
அதிமுக, விஜய் கட்சிகளுக்கு போடும் வாக்கு பாஜகவிற்கு போடும் வாக்கு. அதை செய்யக்கூடாது என்று கூறத்தான் நான் மாநில முழுவதும் பிரசாரம் செய்து வருகிறேன். கும்பகோணத்தில் திமுக வேட்பாளா் அன்பழகன் வெற்றி பெற விசிகவினா் அயாரது உழைக்க வேண்டும் என்றாா் அவா்.